தொடரும் போராட்டக் களம்: டெல்லியில் நவ.29ல் திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும்: விவசாய சங்கங்கள் முடிவு..!

டெல்லி: ஒன்றிய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளை பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

40 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்த சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கியது. மேலும் பல விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. இதில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 3 வேளாண் சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.

கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இந்தநிலையில் போராட்டங்களை நீடிப்பது குறித்து டெல்லி எல்லைகளில் போராடக்கூடிய  விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் வருகிற 22 ஆம் தேதி லக்னோ பேரணியும், 26 ஆம் தேதி விவசாயிகளின் ஓராண்டு  நிறைவு போராட்டம் மற்றும் பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும்  குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக்கு அரசு இதுவரை உரிய பதில் வழங்கவில்லையென தெரிவித்த விவசாய சங்கத்தினர், தங்களோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். எனவே தங்களின் முழுமையான கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More