சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்: கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம்

மரக்காணம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம், சாலையில் 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் புதுச்சேரி- சென்னை இடையே போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதி கனமழை கொட்டி வந்தது. கனமழையின் காரணமாக ஏரிகள், குளங்கள் நிறைந்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த வெள்ளநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்று கடலில் கலக்கும். ஆனால் தற்போது, பக்கிங்காம் கால்வாயில் வரலாறு காணாத அளவுக்கு அதிகளவு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் புகுந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் மூழ்கி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துவிட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் போன்ற பகுதிகளில் இருந்து வருகின்ற அதிகப்படியான மழைநீர், பக்கிங்காம் கால்வாயில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளநீர் மரக்காணம் அருகே இசிஆர் சாலையில் செட்டி நகருக்கும் கூனிமேடு பகுதிக்கும் இடையே 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் புதுச்சேரி- சென்னை இசிஆர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதால், போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: