×

திருச்சியில் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை: இரவு ரோந்துபணியில் திருடர்களை பிடித்தபோது அவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இன்று அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 2 திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார்.  

இச்சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்து பணியிலிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன்.  இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த  இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : SI ,Trichy ,Chief Minister ,MK Stalin , Trichy, Special SI. , Financial Assistance, Chief Minister MK Stalin, Announcement
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ