×

கிருஷ்ணகிரி அருகே சாலை துண்டிப்பால் கிராம மக்கள் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தரமற்று அமைக்கப்பட்ட சாலை துண்டிக்கப்பட்டதால், மலை கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதிக்குட்ட நாரலப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமம், மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 97 குழந்தைள் உட்பட 997 பேர் வசித்து வருகின்றனர். கடந்த 5 தலைமுறைகளாக இங்கு வசிக்கும் இம்மக்கள், சாலை வசதிக்காக மட்டும் 50 வருட போராட்டம் நடத்தினர். மலையின் மீது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

இப்பகுதி மக்கள் தங்கள் தேவைகளுக்காக தேர்தல் புறக்கணிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டி வந்த நிலையில், ரூ 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில், அவசர கதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அமைத்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில், சாலைகள் பிளந்தும், தண்ணீர் தேங்கியும் உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘ஏக்கல்நத்தம் பகுதி மக்கள், சாலை வசதி கேட்டு ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்தது முதல் போராடி வருகிறோம்.

தற்போது அவசர கதியில் போடப்பட்ட சாலையால், மலையிலிருந்து கீழிறங்க முடியாமல் தவித்து வருகிறோம். சாலைகளில் ஆங்காங்கே பிளவுகளும், மலைப்பகுதி சாலையின் இருபுறமும் காட்டாற்று வெள்ளம் தேங்கியுள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மலைப்பகுதி வழியாகவும் மக்கள் இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இங்குள்ள இருளர் காலனி வீடுகள், மழையால் இடிந்து விழும் சூழலில், அனைவரும் அத்தியாவசிய பொருட்களின்றி தவித்து வருகிறோம். சாலை அமைத்தும் வாகனங்கள் செல்லமுடியவில்லை. பள்ளிகள் திறந்தும் கட்டிடங்கள் பராமரிக்கப்படவில்லை, காலனி வீடுகள் இருந்தும் மக்கள் சாலையில் வசிக்கின்றனர். எனவே, எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Kṛṣṇakiri , Villagers suffer due to road blockage near Krishnagiri
× RELATED கிருஷ்ணகிரி பகுதியில் அறுவடைக்கு...