×

பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் வாங்க ரூ.1,088.18 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை  செயலாளர் முகமது நசிமுத்தின் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று என 20 பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

அதன்படி 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொருட்களை வாங்க, பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் மொத்தம் ரூ.ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் வழங்குமாறு அரசை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் கோரியுள்ளார்.

அவரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, தைப் பொங்கல் பண்டிகைக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநருக்கு அனுமதி அளித்தும், அதற்கான நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இதில், நெய் மட்டும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும். இந்த செலவினத்திற்கு 2021-22ம் ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கையின்போது சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : TN ,Directive , Rice Family Cardholders, Pasteurisi, Allocation, Government of Tamil Nadu
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை