திருவண்ணாமலை கார்த்திகை தீப பாதுகாப்பின்போது கோயில் வாசலில் மயங்கி விழுந்த சிறப்பு எஸ்.ஐ.யை மீட்ட எஸ்பி: அமைச்சர்களும் அக்கறை காட்டி மின்னல் வேக சிகிச்சை அளித்ததால் உயிர் பிழைத்தார்

சென்னை:  திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீப பாதுகாப்பின்போது கோயில் வாசலில் மயங்கி விழுந்த சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை, எஸ்பி வருண்குமார் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததால் காவலர் உயிர் பிழைத்தார். அமைச்சர்கள் மருத்துவமனை சென்று பார்வையிட்டு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதால் டாக்டர்கள் விரைவாக சிகிச்சை அளித்தனர். திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடந்த கார்த்திகை தீபத்தையொட்டி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டனர். அதில் திருவள்ளூர் மாவட்டம் புலரம்பாக்கம் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சிதம்பரமும் (55) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு, கோயில் கோபுரம் அருகே வாசலில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.  

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென  கோயில் வாசலிலேயே மயங்கி விழந்தார். அவர் எதனால் மயங்கி விழுந்தார் என்பது தெரியாமல் சக போலீசார், அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து ஓரமாக உட்கார வைத்தனர். மயக்கம் தெளிந்தும்  அவரால் நடக்க முடியவில்லை. வாசல் அருகே படுத்தே இருந்தார். சிதம்பரம் மயங்கி விழுந்த தகவல் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவிட்டார். ஆனால் திடீரென நேரில் போக வேண்டும் என்று முடிவு எடுத்து விரைவாக காரில் சைரனை ஒலிக்க விட்டபடி வேகமாக திருவண்ணாமலைக்கு சென்றார். அதற்குள் காவலரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்தனர்.

 தான் மட்டும் போவதற்குள் சிறப்பு எஸ்.ஐ.க்கு ஆபத்து நேரலாம் என்று நினைத்த எஸ்பி வருண்குமார், திருண்ணாமலை மாவட்ட எஸ்பி பவன்ரெட்டி, கூடுதல் எஸ்பி கிரண் சுருதி ஆகியோரை சிதம்பரத்தை உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதிகாரிகள்  சென்றால்தான் டாக்டர்கள் அதிகமாக கவனிப்பார்கள் என்று தெரிவித்தார். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் அதிகாரிகளும் மருத்துவமனை சென்றனர். சிறிது நேரத்தில் வருண்குமாரும் அங்கு சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும், அவர் தலை வலி, உடம்பு வலி என்றவுடன், டாக்டர் படிப்பு முடித்துள்ள எஸ்பி வருண்குமார், எஸ்எஸ்ஐயை உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் டாக்டர்களுடன் அனுப்பி வைத்தார்.

 பின்னர் வருண்குமாரே, தனது மாவட்ட அமைச்சர் நாசர், வடசென்னையைச் சேர்ந்த சேகர்பாபு ஆகியோருக்கு தெரிவித்தார். அமைச்சர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர். டீன் தேரணி ராஜனும், டாக்டர்கள் குழுவுடன் தயாராக இருந்தார். சிறப்பு எஸ்ஐ அழைத்து வரப்பட்டதும், அவருக்கு உடனடியாக பல்வேறு சோதனைகளை நடத்தினர். அப்போதுதான் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததும், அவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் தாமதித்து இருந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். கார்த்திகை தீப நேரத்தில் உள்ளூரில் சாதாரண மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருந்தாலோ உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்தாலோ, சிறப்பு எஸ்.ஐ. சிதம்பரத்தின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும்.

மேலும் திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், சிறப்பு எஸ்ஐ என்று நினைத்து வீட்டில் இருக்காமல் உடனடியாக திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்று அவரை பார்த்ததோடு, சமயோசிதமாக சென்னைக்கு அழைத்து வந்து, 2 அமைச்சர்கள், டீன் மற்றும் மருத்துவ டீமையே இயக்கி, அவருக்கு உடனடியாக மூளையில் அறுவைச் சிகிச்சை செய்ய வைத்து உயிரை காப்பாற்றிய சம்பவம் திருவள்ளூர் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால், ஒருவர் மயங்கி விழுந்துள்ளார் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உயர் அதிகாரிகள் சிரமத்தை பார்க்காமல் செயல்பட்டு, அமைச்சர்கள், அதிகாரிகளையும் உதவிக்கு அழைத்து விரைவாக செயல்பட்டால் சிதம்பரம் போன்ற பல காவலர்கள் மட்டுமல்ல பல துறைகளில் பணியாற்றுகிறவர்கள் ஏன் பொதுமக்களையும் காப்பாற்ற முடியும் என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட காவலர்கள்.

Related Stories:

More