×

கரூரில் உருக்கமான கடிதம் எழுதிவைத்து பிளஸ்2 மாணவி தூக்கிட்டு தற்கொலை: ‘‘பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாக இருக்கட்டும்’’

கரூர்: கரூரை சேர்ந்த 17 வயதான மாணவி, அங்குள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். அவரது தந்தை இறந்து விட்டார். வாடகை வீட்டுக்கு வந்து 2  மாதங்கள் தான் ஆகிறது. இங்கு வந்த சில நாட்களிலேயே பாட்டியும் இறந்துவிட்டார்.  இதனால் தாயுடன் மாணவி வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். வேலைக்கு தாய் சென்று இருந்ததால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கார்த்திகை தீபத்தையொட்டி, வாசலில் தீபம் வைக்காததால் பக்கத்து வீட்டு பாட்டி வந்து பார்த்தபோது, அங்கு மாணவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து தெரிவிக்கவே, வெங்கமேடு போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் வீட்டில் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழ்வதற்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போது பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிய ஆளாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை. ஆனா, முடியவில்லை. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மாமா, அம்மு. உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா, நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன். மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி மச்சான் சாரி என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

மாணவி தற்கொலைக்கு பாலியல் தொல்லை தான் காரணம் என்பதால் அதற்கு காரணம் யார் என உடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ேமலும் மாணவியின் செல்போனும் கைப்பற்றப்பட்டு சமீபத்தில் யார், யார்  பேசியிருக்கிறார்கள். வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள் என்பதும் குறித்தும் விசாரணை நடக்கிறது/ சமீபத்தில் கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து கரூரிலும் பள்ளி சென்று திரும்பிய மாணவி தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வழக்கை சரிவர விசாரிக்காத வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்

Tags : Illustrated letter, student suicide, sexual harassment
× RELATED திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ.3...