மேலும் பல மாணவிகள் பாலியல் புகார் திண்டுக்கல் நர்சிங் கல்லூரிக்கு சீல்: அமமுக பிரமுகரை கைது ெசய்ய தனிப்படை தீவிரம்

திண்டுக்கல்: தாளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட விவகாரத்தில், திண்டுக்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் அருகே பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். அமமுக கட்சியின் அம்மா பேரவை மாநில இணைத்தலைவராக உள்ளார். மேலும், வேட்டை நாய்கள், காதல் 16 என 2 திரைப்படங்களைதயாரித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட  படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் 17 வயதான முதலாமாண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி நேற்று முன்தினம் மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனைத்தொடர்ந்து மாணவி அளித்த புகாரின்பேரில், தாடிக்கொம்பு போலீசார், தவறுக்கு உடந்தை, கொலை மிரட்டல்  மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் தாளாளர் ஜோதிமுருகன் மற்றும்   விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு  செய்தனர்.  இவர்களில் கைதான அர்ச்சனாவை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில்  அடைத்தனர்.தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை தேடி வருகின்றனர். மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள் வருமாறு :நர்சிங் கல்லூரி விடுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்றுள்ளனர். இவர்களுக்கு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தொடர்ந்து பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும் நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதிமுருகன், மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆண்கள் கல்லூரி விடுதிக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் கொடுத்ததாகவும்,  இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உதவியாக இருந்ததாகவும், மேலும் பல மாணவிகள் புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி மற்றும் வட்டார மருத்துவ இயக்குனர் கொண்ட குழு, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் வகுப்பறைகள், கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. மாணவிகள் அவரவர் வீட்டுக்கு அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

More