சீனா ஊடுருவலையும் ஒப்புக் கொள்ளுங்கள்: மோடி மீது ராகுல் அடுத்த தாக்குதல்

புதுடெல்லி: `இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவிய விவகாரத்திலும் அரசு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியில் கடந்தாண்டு மே மாதம் இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் இரு நாடுகளும் ராணுவத் தளவாடங்கள், படைகளை குவித்து வருவதால், பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே, அருணச்சால் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சீனா 2வது கிராமத்தை நிறுவி உள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின. ஆனால், ஒன்றிய அரசு இது பற்றி எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சீனா உடனான எல்லைப் பிரச்னையில் நாட்டின் ஒருமைப்பாட்டை மோடி அரசு சமரசம் செய்து கொண்டதாக காங்கிரஸ்  தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஒன்றிய அரசு இதை ஏற்காமல் மறுப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `இந்திய எல்லையின் அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ஊடுருவி ஆக்கிரமித்துள்ள உண்மையையும் மோடி அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் தவறு என்று ஒப்புக் கொண்டு, அவற்றை மோடி ரத்து செய்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories:

More