×

அதிரடி தீர்ப்புகளை வழங்கி அதிர வைத்தவர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிய போலீசார்: பீகாரில் அதிர்ச்சி

பாட்னா: அதிரடி தீர்ப்புகளை வழங்கி வந்த நீதிபதியை, நீதிமன்றத்தில் புகுந்து இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் தாக்கி, துப்பாக்கியால் சுட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், மதுபானியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக அவினாஷ் குமார் உள்ளார். இவர் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி அடிக்கடி பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் தனது அறையில் அமர்ந்து வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த கோகர்திகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணாவும், சப்-இன்ஸ்பெக்டர் அபிமன்யு குமார் சர்மாவும் நீதிபதி அவினாஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்,  அவினாஷ் குமாரை கடுமையாக தாக்கி, தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட முயன்றனர். அங்கிருந்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் போலீசாரை தடுத்து, நீதிபதியை காப்பாற்றினர். தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை போலீசார்  கைது செய்துள்ளனர். இவர்களின் தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு நீதித்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை தங்களின் அமர்வுக்கு மாற்றும்படியும்,  வரும் 29ம் தேதி உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட எஸ்பி ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர். இந்த தாக்குதல் மூலம், நீதித்துறைக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். நீதிமன்றத்துக்குள் நுழைந்து நீதிபதியை போலீசார் தாக்கிய சம்பவம், பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களின் துணியை துவைக்க சொன்னவர்
சமீபத்தில், பலாத்கார வழக்கில் கைதான கைதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி  அவினாஷ் குமார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அந்த கிராமத்தை சேர்ந்த  பெண்களுக்கும் 6 மாதங்களுக்கு இலவசமாக துணி துவைத்து கொடுக்கும்படி  உத்தரவிட்டார். அதேபோல், போலீசார் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை,  அவர்களுக்கு சட்ட அறிவு போதவில்லை என்று கூறிய அவர், அந்த மாவட்ட  எஸ்பி.யையும். டிஎஸ்பி.யையும் சட்டம் சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு  அனுப்பும்படி மாநில டிஜிபி.க்கு உத்தரவிட்டார்.

இதேபோல், சாராய வழக்கில்  கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கடந்த ஆகஸ்ட்டில் ஜாமீன் வழங்கியபோது,  கிராமத்தை சேர்ந்த 3 ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும்படி அதிரடியாக  உத்தரவிட்டார். இவருடைய இதுபோன்ற அசாதாரண உத்தரவுகளால் அதிர்ச்சி அடைந்த  பாட்னா நீதிமன்றம், அவரின் அதிகாரங்களை பறித்து உத்தரவிட்டது.

Tags : Bihar , Action verdict, court, judge, barrage of cops
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு