×

ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணிக்கு பாராட்டு மஞ்சள் தமிழர் தோனியின் ரசிகனாக வந்திருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘மக்கள்  பணிகளுக்கு இடையில்,  ‘மஞ்சள் தமிழர்’ தோனியின்  ரசிகனாக, இந்த விழாவில் பங்கேற்று  இருக்கிறேன்’ என்று ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணிக்கு நடந்த பாராட்டு விழாவில்   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நெகிழ்ந்தார். ஐபிஎல்  14வது சீசனில் 4வது முறையாக கோப்பை வென்ற சென்னை  சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)  அணிக்கு பாராட்டு விழா நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில்  சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்றார்.  கேப்டன்  தோனி மற்றும் வீரர்கள், அணி அலுவலர்களுக்கு  முதல்வர் நினைவு பரிசுகளை  வழங்கினார்.  முதல்வர் பெயர் பொறித்த 7ம் எண் கொண்ட (7 என்பது ேதானியின் ராசி எண்) சீருடையில் சென்னை வீரர்கள்   கையெழுத்திட்டிருந்தனர். அதனை முதல்வருக்கு நினைவு பரிசாக தோனி வழங்கினார். தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தோனி வழங்கினார்.

அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: என்னை  முதல்வராக வந்து பங்கேற்க வேண்டும் என்று சென்னை அணி நிர்வாகத்தினர்  அழைத்திருந்தனர். ஆனால், நான் இங்கு முதல்வராக வரவில்லை.  நான் தோனியின்  ரசிகனாக தான் வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல எனது பேரன், பேத்திகள்  வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என் மனம் கவர்ந்த தோனியின்  ரசிகர்களாக வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல  எனது  தந்தை கலைஞரும் தோனியின் ரசிகர்தான். அதனால் மிகுந்த  மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், பூரிப்புடனும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து  இருக்கிறேன்.    இந்த வாய்ப்பு தந்தமைக்காக உளமாற நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன்.

இந்த பாராட்டு  விழாவில்  இருந்தாலும், ஒரு முதல்வராக என் மனது  கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழை  குறித்து தான் யோசித்துக்  கொண்டு இருக்கிறது.  இந்த  நெருக்கடியான நேரத்தில் சிறிது நேரம்  சற்று இளைப்பாறிட எண்ணி இந்த  விழாவில் பங்கேற்றேன். கோட்டையில் இருந்தாலும் குடிசைகளை  பற்றியே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே எங்களை எல்லாம் ஆளாக்கிய  தலைவர் கலைஞர் கற்றுத் தந்த பாடம். நானும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன்தான். சென்னை மேயராக இருந்தபோது  காட்சி  போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கார்கில் நிதி திரட்ட சேப்பாக்கத்தில் நடந்த காட்சி  போட்டியில், முதல் உலக கோப்பையை வென்ற, இங்கு கம்பீரமாக மேடையில்  அமர்ந்திருக்கும்  கபில்தேவுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு மேயர் என்ற  முறையில்  எனக்கு கிடைத்தது.

கபில்தேவுக்கு பிறகு உலக  கோப்பையை நமது நாட்டுக்கு பெற்றுத் தந்தவர் நம்முடைய தோனி. ஜார்கண்ட்  மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும்  தோனி இப்போது ஏறத்தாழ   சென்னைக்காரராகவே மாறிவிட்டார்.   தமிழ்நாட்டு ரசிகர்களின் செல்லப்  பிள்ளையாக இருக்கிறார். அவரை தமிழக மக்கள் தங்களில் ஒருவராக  நேசிக்கிறார்கள். தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர்.    தமிழர்களுக்கு எல்லாம் பிடிக்கும்போது நமது தலைவருக்கு பிடிக்காமல்  இருக்குமா? எத்தனை பரபரப்பு இருந்தாலும், நெருக்கடி  இருந்தாலும்  கலைஞரும், தோனியும் ‘கூலாக’ இருப்பார்கள். நெருக்கடியில்  இருந்து எப்படி மீண்டு வெற்றி பெறுவது என்று நிரூபித்தவர்கள்.  சிக்கலான நேரங்களில் தோனி   ‘கூலாக’ இருக்கிறார் என்பதை விட   வெற்றியை நிலை நிறுத்தும் ஆளுமை  கொண்டவராக இருக்கிறார்.

அதனால் சென்னை அணி மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆரம்ப  காலத்தில் தோனி ஆடிய விதம், சதங்கள், அவற்றை எட்டிய வேகம்,   அவரது ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும்  திறனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு  வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் சில திட்டங்களை அறிவித்த போது,  இளைஞர்கள்  பலரும் என்ன சொல்லி வாழ்த்தினார்கள் என்றால், ‘தினமும் ஒரு சிக்சர்  அடிக்கிறீர்கள்’ என்றுதான் வாழ்த்தினார்கள். எங்கோ சிறு  நகரில் பிறந்து, சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து இன்று உயர்ந்த நிலையை   தொட்டு இருக்கிறார். அதனால்தான் கலைஞருக்கும் தோனியை பிடிக்கும்.  ஒரு நல்ல அரசு எல்லாத் துறைகளையும்,  மக்களையும் பாதுகாக்கும்.

எல்லா விளையாட்டுகளுக்கும் ஊக்கமளிக்கும்.   சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான களம் அமைத்து  தருவதில் ஊறுதியுடன் செயலாற்றி வருகிறோம்.  டோக்கியோ ேபாட்டியில்  சாதித்தவர்களுக்கு  அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இணைந்து செயலாற்றினால் மீண்டும் எழு முடியும் என்பதை தோனி தலைமையிலான சென்னை அணி நிரூபித்துள்ளது. ‘தோனி அவர்களே சென்னை அணியை பல ஆண்டுகளுக்கு நீங்கள் வழி நடத்த  வேண்டும்(ஆங்கிலத்தில்...).’  ‘ஒன்ஸ் மோர்’ கேளுங்கள். (அரங்கத்தில்  இருப்பவர்கள் ‘ஒன்ஸ் மோர்’ என்று குரலெழுப்புகிறார்கள்) ... (மீண்டும்  ஆங்கிலத்தில்)  தோனி அவர்களே  சென்னை அணியை பல ஆண்டுகளுக்கு நீங்கள் வழி  நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

எனது கடைசி போட்டி சென்னையில் தான்!
கடந்த ஆண்டுகளில் கிரிக்கெட், அதன் வடிவம் மாறியிருக்கிறது. அதனால்தான் நாம் இப்போது இங்கு இருக்கிறோம். சென்னையை பொறுத்தவரை எனது பிணைப்பு 2008ல் ஐபிஎல் உடன் தொடங்கியது. நான் சென்னைக்காக விளையாட வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் சென்னை என்னை தேர்வு செய்தது. மாறுபட்ட பண்பாடுகளை கொண்ட பகுதியில் இருந்து வந்திருக்கிறேன். என் பெற்றோர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். பின்னர் உத்ரகாண்ட் மாநிலமாக  மாறியது.  நான் பீகார் மாநிலம் ராஞ்சியில் பிறந்தேன். அது பின்னர் ஜார்க்கண்ட் மாநிலமானது. பின்னர் 18 வயதில் ரயில்வே பணிக்காக  மேற்கு வங்கம் போனேன். அதன் பிறகுதான் சென்னைக்கு வந்தேன்.

சென்னை என்னை மாற்றியது. கற்றுத் தந்தது. இந்த ஊர் ரசிகர்கள்  நல்ல கிரிக்கெட்டை ஆதரிப்பவர்கள்.  எதிரணி வீரர்கள் நன்றாக விளையாடினாலும் பாராட்டுவார்கள். சென்னையில் மட்டுமல்ல, உலகத்தில் எங்கு விளையாடினாலும் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அவர்களுக்கு நன்றி.  நாங்கள் 2 ஆண்டுகள் விளையாடவில்லை. ஆனாலும் ரசிகர்கள் எங்களுடன் இருந்தார்கள். நான் எப்போதும் திட்டமிட்டு விளையாடுவேன். எனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும். ஆனால், அது அடுத்த வருஷமா, ஐந்தாவது வருஷமா என்று தெரியவில்லை. - சிஎஸ்கே கேப்டன் தோனி

டி20 விளையாடிய முதல் வீரர் ஸ்ரீகாந்த்!
சென்னை எனக்கு பிடித்த நகரம். நான் நிறைய தமிழ் வார்த்தைகளை கற்று இருக்கிறேன். அதில் இங்கு உட்கார்ந்திருக்கும் எனது கதாநாயகன் ஸ்ரீகாந்துக்கும் பங்கு இருக்கிறது. டி20 கிரிக்கெட் இப்போது தொடங்கியிருக்கிறது. ஆனால்  ஸ்ரீகாந்த்  1983க்கு முன்பே டி20 கிரிக்கெட்டை விளையாட தொடங்கி விட்டார்.  அதுமட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை  விளையாட தொடங்கிய முதல் வீரர் ஸ்ரீகாந்த்தான். அதனால் ஸ்ரீகாந்துக்கு மட்டுமல்ல ஒற்றையாக இருந்து சாதித்த சென்னை அணிக்கும், கலர்புல் கதாநாயகன் தோனிக்கும் வாழ்த்துகள்.    - இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ்



Tags : Tony ,Chennai team ,IPL Cup ,BC ,Q. Stalin , IPL trophy, Chennai team, yellow Tamil Dhoni, Chief Minister MK Stalin
× RELATED ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு எதிரான...