ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம் எம்ஜிஆர், என்டிஆர், சிவாஜியின் திரையுலக பங்களிப்பு அளப்பரியது

பனாஜி: கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றிய தகவல்  ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: திரைப்படக் கலாச்சாரங்களை ஒருங்கிணைப்பதோடு, பல்வேறு சமூகம் மற்றும் கலாச்சாரப் பண்புகளை புரிந்து கொள்ளவும் வழிவகுப்பதுடன், உலகத் திரைப்படங்களை அறிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. எனவேதான், சுதந்திரப் பெருவிழா கொண்டாடும் வேளையில், திரைப்படத் துறையில் புதுமைப் படைப்பாற்றல் கொண்ட 75 இளைஞர்கள், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமை காரணமாக, திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கு உகந்த இடமாக மாற இந்தியா முயற்சித்து வருகிறது.

 சாமானிய மனிதனின் வாழ்க்கைக் கதையை, அவர்களது போராட்டங்கள், அவர்களது உணர்வுகள், நற்பண்புகள், யதார்த்த முறையில் பிரதிபலிக்கும் திரைப்படங்கள், பிரசித்தி பெற்ற திரைப்படங்களாக மாறுகின்றன. நமது நடிகர்கள், கடந்த கால வரலாற்றுத் தலைவர்கள் மற்றும் தலை சிறந்த நிகழ்வுகளை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்றோர் திரையுலகிற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தலைசிறந்த நடிகர்களான திலீப் குமார், புனித் ராஜ்குமார், சுமித்ரா பவே மற்றும் பிற ஜாம்பவான்களையும் நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

திரையுலகம் உங்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பேட்டி அளித்த எல்.முருகன், ‘‘முதுபெரும் திரைப்பட நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. ஹேமமாலினிக்கு, இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட சாதனையாளர் விருது வழங்கப்படுவது, தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும்’’ என்றார். இதற்கு முன்பு இந்த விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Related Stories:

More