×

தடுப்பூசி போட்டவர்கள் யார்? எல்லாரும் தெரிந்து கொள்ளலாம்: கோவின் இணையதளத்தில் ஒன்றிய அரசு மாற்றம்

புதுடெல்லி: கோவின் இணைய தளத்தில் தடுப்பூசி நிலை குறித்து யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அனைத்து விமான போக்குவரத்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகள், சந்தைகள், பொழுதுபோக்கு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கவலை அளித்துள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள தனிநபர்களின் விவரத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய வகையில், கோவின் இணைய தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதனைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள், ஐஆர்சிடிசி உள்ளிட்ட அரசு அமைப்புகள், தங்களிடம் வருபவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? இல்லையா? என இனிமேல் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். கோவின் செயலியில் தனிநபர்களின் மொபைல் எண், பெயரைப் பதிவு செய்த பிறகு வரும் ஓடிபி.யை கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் தடுப்பூசி போட்டுள்ளாரா? என்பது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக அறிந்து அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி கையிருப்பு 21 கோடி
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கி வருகிறது. தற்போது, தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களிடம் குறைந்து வருவதால், தடுப்பூசிகளின் கையிருப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாநில அரசுகளிடம் 21.65 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

202 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய பெண்
கொரோனா தொற்று காரணமாக கடந்த மே 1ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குஜராத்தின் தகோத் நகரை சேர்ந்த கீதா தார்மிக், 202 நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அவர் வீட்டிற்கு வந்ததை அவரது குடும்பத்தினர் ஒரு விழாவைப் போல கொண்டாடினர். சிகிச்சையின் போது, 9 முறை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் போராடி மீண்டு எழுந்துள்ளார்.

புதுச்சேரிக்கு எச்சரிக்கை
லடாக், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை முதன்மை செயலர்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில்,  ‘தங்களின் யூனியன் பிரதேசங்களில் புதிய கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை விட 36.2, 41.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. ஆந்திரா, இமாச்சல், ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகளுக்கும் இதேபோல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Tags : Govin , Vaccine, Gov. Website, United States
× RELATED கேலோ இந்தியா வாள்வீச்சு தமிழ்நாட்டுக்கு தங்கம்