×

பக்தர்களிடம் பணம் பெற்று தரிசனத்துக்கு அனுமதி திருத்தணி முருகன் கோயிலில் சிசிடிவி மறைக்கப்பட்டது குறித்து விசாரணை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் சிசிடிவி மறைக்கப்பட்டது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. தவறு நடந்தது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
தெரிவித்தார். அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அதிலும், சஷ்டி, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக பொதுதரிசனம், ரூ.150, ரூ.250 சிறப்பு தரிசனம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில நேரங்களில், சிறப்பு தரிசன கட்டணத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதை பயன்படுத்தி,  கோயில் ஊழியர்களில் சிலர் பக்தர்களிடம் ரூ.2 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு கருவறை வரை சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக தெரிகிறது. இதை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் ஊழியர்கள் தங்கள் முறைகேட்டை மறைப்பதற்காக கோயிலில் வைத்துள்ள சிசிடிவி கேமராவை மறைத்து வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் நேரில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த விசாரணையில், பக்தர்கள் சிலரிடம் கோயில் ஊழியர்கள் பணம் பெற்றுக்கொண்டு அனுமதித்த வீடியோ ஆதாரங்கள் சிக்கியது. குறிப்பிட்ட சில நேரங்களில் சிசிடிவி கேமராவை மறைக்கப்பட்ட தகவலும் வெளியானது. இதை தொடர்ந்து கோயில் உதவியாளர் வேலு, எலக்ட்ரீசியன் குமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார். இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘திருத்தணி முருகன் கோயில் வளாகத்தில் சிசிடிவி கேமராவை மறைக்கும் வீடியோ சமூக வலைதளங்கங்களில் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட 2 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு விசாரணையில் இருப்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணையில் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்ட பிறகே, தவறு எங்கே நடந்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.



Tags : Thiruthani Murugan Temple ,Minister ,Sekarbabu , Devotos, Dinero, Darshan, Permiso, Templo Thiruthani Murugan, CCTV, Investigación, Ministro Sekarbapu
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...