×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு ஊனச்சான்று வழங்க தனி வார்டு: 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சி.ஜெகதீசன் என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி, அதில் இழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தாக்கல் செய்வதற்காக மருத்துவ வாரியத்தின் ஊனசான்று பெறும் நடைமுறைக்காக சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர் 40 சதவீதம் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சான்றளிக்கப்பட்டது. இதனையடுத்து ஊனச்சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்க கோரியும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கக்கோரியும்  கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி, விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட குறைபாட்டை நிர்ணயிக்கும் ஊனச்சான்று கோருபவர்களை தங்க வைக்க தனிவார்டு இல்லாததால் தரையில் அமர்த்தப்படுவதாகவும், இதனால் மனுதாரர் வருமானம் இழந்து குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கோவிந்தசாமி மனுதாரரின் கோரிக்கை மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்திற்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தான் பாதிக்கப்பட்டதோடு நிற்காமல், தன்னைப் போன்ற வேறு யாரும் பாதிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து இருப்பதாகவும், அவர்களை கருத்தில் கொண்டு சிறந்த மருத்துவமனையாக செயல்படக்கூடிய ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஊனச்சான்று வாங்க வருபவர்களுக்காக தனிவார்டை அமைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து, அதை வரும் ஜனவரி 7ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Tags : Rajiv Gandhi Government Hospital ,ICC , Hospital del Gobierno Rajiv Gandhi, Accidente, Certificado de discapacidad, Sala privada, ICC
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...