×

தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று வருகை: சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் நாளை ஆய்வு 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய அரசின் 7 பேர் அடங்கிய மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. இந்த குழு தனித்தனியாக பிரிந்து, நாளை மற்றும் நாளை மறுநாள் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழுவினர் நாளை ஆய்வு செய்கின்றனர். இதையடுத்து 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது முதலே கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களும், தஞ்சை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களும் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. சென்னையில் மழை வெள்ளத்தால் புறநகர் பகுதி வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதேபோல், தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டமும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதேபோல், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் குழுவும் தொடர்ந்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. கனமழையால் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. 9,600 குடிசைகளும், 2,100 வீடுகளும் சேதமடைந்துள்ளன. எனவே, தமிழகத்திற்கு முழுமையான நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.2,079 கோடி நிவாரணம் கேட்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய குழு இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு சென்னை வருகிறது. இந்த குழுவில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை ஐடி பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, டெல்லி மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்று சென்னை வந்ததும் மத்திய குழு தலைமை செயலகம் சென்று அங்கு தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.

பின்னர், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கணினி வாயிலாக மத்திய குழுவிற்கு திரையிட்டு காண்பிக்கப்படும். அதன்பின்னர், இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிடுகின்றனர். பின்னர், 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலகத்தில் இக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட கூடுதல் பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய குழுவிடம் கூடுதல் நிதி கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அன்றைய தினம் மாலையே இந்த குழுவினர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். டெல்லி சென்றதும், இந்த குழுவினர் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கையாக தயார் செய்து, எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது, எவ்வளவு நிவாரணம் தொகை வழங்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் வழங்குவார்கள்.

இந்நிலையில், சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நாளை (இன்று) மதியம் சென்னை வர உள்ளனர். இந்த குழுவினர் சென்னை வந்தபிறகு 22, 23ம் தேதி எல்லா மாவட்டங்களிலும் நேரில் பார்வையிட உள்ளனர்.  22ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ஒரு குழு செல்ல உள்ளது. அன்றைய தினமே மற்றொரு குழு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட உள்ளது. 23ம் தேதி ஒரு குழுவினர் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.

அதே நேரத்தில் மற்றொரு குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகள் மற்றும் வீடு இழந்தவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து சேத விவரங்களை கேட்டறிவார்கள். மத்திய குழுவின் ஒரு பிரிவுக்கு தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டியும், மற்றொரு குழுவுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் குமார் ஜெய்ந்த் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தி செல்வார்கள். மத்திய குழுவினர் எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் குறிப்பு எடுத்து அந்த பகுதிக்கு மத்திய குழுவை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களை மேம்போக்காக ஆய்வு செய்யாமல், உண்மையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளை சந்திக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் அங்குள்ள விவசாய சங்கங்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சென்று தங்கள் பகுதி சேதங்கள் குறித்து மத்திய குழுவுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளோம். இதை தொடர்ந்து, மத்திய குழுவினர் 24ம் தேதி சென்னை வந்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார்கள். தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடனே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை உடனடியாக உள்துறை செயலாளர் அமித்ஷாவை சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் மழை வெள்ள நிவாரண உதவியாக ரூ.2,629.29 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதில் உடனடியாக வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.549.69 கோடி விடுவிக்கும்படி கேட்டுள்ளோம்.

இது முதற்கட்ட கோரிக்கைதான். தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிதாக சேத விவரங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுகுறித்து அறிக்கை தயார் செய்த பிறகு, தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினாலும், அனைத்து ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்வதால் நம்முடைய மாநில ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் புதிதாக கணக்கெடுக்த்து வருகிறோம். இரண்டும் சேர்த்து அறிக்கையாக தயார் செய்து ஒன்றிய அரசிடம் கூடுதல் நிவாரண உதவி கேட்க இருக்கிறோம்.

எவ்வளவு சேதம் இருக்கிறதோ, அவ்வளவு நிவாரண தொகை கேட்கப்படும். கடந்த ஆண்டு போல தாமதப்படுத்தாமல், சேத விவரம் கிடைத்த உடனேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, டி.ஆர்.பாலு எம்பி மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்த்தார். புதிதாக சேத விவரம் சேர்க்கப்பட்டு கட்சி பாகுபாடு இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் டெல்லியில் இருந்து அதிக நிதியை கேட்போம். இரண்டு நாளில் எல்லா இடங்களையும் குழு ஆய்வு செய்வது கடினம். எனவே, எந்த இடத்தில் அதிக பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த பகுதி விவசாயிகளை முன்னிலைப்படுத்தி அவர்களே குழுவிடம் சேதம் குறித்து பேச வேண்டும் என கலெக்டர்களிடம் அறிவுறுத்தி கூறியுள்ளோம்.

  மழையால் மாணவர்களின் சான்றிதழ்கள், பத்திரங்கள் உள்ளிட்டவைகள் காணாமல் போயுள்ளது என்பதை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். வரக்கூடிய நாட்களில் அதிக தடுப்பணைகளை கட்ட உள்ளோம். பாலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பழைய வீடுகளும், கரையோரம் இருந்த வீடுகளும் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. 24 மணி நேரமும் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க உழைத்துக்கொண்டிருக்கிறோம்.  இவ்வாறு கூறினார்.

நிவாரண முகாம்களில் 34,397 பேர்
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்களின் நலன் கருதி 14 மாவட்டங்களில் மொத்தம் 419 முகாம்களில் 34,397 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில் 645 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 62,01,764 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கியுள்ள 354 பகுதிகளில், 272 பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 82 பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி ராட்சத பம்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Tamil Nadu , Daños por inundaciones en Tamil Nadu, Comité Central de Chennai, Tiruvallur, Kanchi, Ministro Principal MK Stalin
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...