×

மோசடி இணையதளம், முகவர்களால் ஆபத்து; நீட் தேர்வர்கள் ‘பாஸ்வேர்டை’ பகிர வேண்டாம்.! மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை

புதுடெல்லி: மோசடியான இணையதளம் அல்லது முகவர்களை நம்பி நீட் தேர்வர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர வேண்டாம் என்று மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1ம் தேதி வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை, மாணவர்களின் மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேரடியாக அனுப்பியது. மேலும், என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் மாணவர்கள் நீட் ஸ்கோர் கார்டை டவுன்லோடு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.  சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். நீட் - 2021 இளங்கலை கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. கட்ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள். இந்நிலையில், மருத்துவ ஆலோசனைக் குழு (எம்சிசி) வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் உரிய  விபரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். போலி இணைய முகவரிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

கவுன்சிலிங்கின் போது விண்ணப்பதாரர்களே  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சேர்க்கை செயல்முறைகளை கடைபிடிக்க வேண்டும். முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் தவிர வேறு எந்த வலைத்தளத்துடனும் எம்சிசி ‘ஹோஸ்ட்’ செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தவறான தகவல்களைப் பரப்பக்கூடிய பிற இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மோசடியான இணையதளம் அல்லது முகவர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், எம்சிசிக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டுகிறோம். அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளது.


Tags : Medical Counciling Committee , Fraud website, risk by agents; Neat selectors do not share 'password'! Medical Counseling Committee Warning
× RELATED முதுநிலை நீட் கட்-ஆப் மதிப்பெண்...