×

திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் 2 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது; விவசாயிகள் தவிப்பு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செய்கின்றனர். இங்கு பிரதான தொழிலாக நெல் கரும்பு, வேர்க்கடலை மற்றும் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவமழையால் திருத்தணி, திருவலாங்காடு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதன்காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் 60 நாட்கள் பயிர்கள் என  சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. வேர்க்கடலை பயிர்களும் மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது.

பூச் செடிகளும் கருகிவிட்டது. இவ்வாறாக அனைத்து பயிர்களும் அழிந்துபோனதால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். எனவே, எங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில், வேளாண்மைத் துறையினர், வருவாய் துறையினர் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெமிலி ஊராட்சிக்கு உட்பட்ட அடுக்கல் பட்டு, ஆற்காடுகுப்பம், அருங்குளம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. எனவே, மழைநீரில் இருந்து விவசாய நிலத்தை பாதுகாக்க அடுக்கல்பட்டு கிராமத்தில் வெள்ள தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணி நந்தி ஆற்றில் இரண்டுபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆறுமுகசுவாமி கோயில் அருகில் உள்ள பாலத்தின் இரண்டுபக்கமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் வெள்ளம் பாதிக்காத வகையில் வெள்ள தடுப்புச்சுவர் கட்டித்தரவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை எஸ்.சந்திரன் எம்எல்எ, கூலூர் ராஜேந்திரன், நள்ளாட்டூர் கமலநாதன், திருத்தணி மேற்கு ஒன்றிய செயலாளர் நாகசாமி, அர்ஜூன்ரெட்டி, நெமிலி குப்பன், தும்பிக்குளம் கோபி, காஞ்சிப்பாடி யுவராஜ், திலகன் உள்பட பலர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். ‘’தமிழக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சந்திரன் எம்எல்ஏ கூறினார்.

Tags : Lakewalangu ,Tiruwalangu , 2,000 hectares of paddy fields submerged in Thiruthani and Thiruvalankadu areas; Farmers suffer
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...