இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் இருந்த தையல் ஊசி அகற்றம்-கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கோவை :  கோவையில் இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் இருந்த 7.5 செ.மீ. நீளமான தையல் ஊசியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். கோவை தியாகராய நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கழுத்தை பிளேடு மூலம் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த இளம்பெண்ணை மீட்டு கடந்த 2-ம் தேதி கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இ.என்.டி. துறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்து கழுத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததால் முதலுதவி செய்தனர். தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது, பெண்ணின் கழுத்தில் மூச்சுக்குழாயிலிருந்து கழுத்து தண்டு பகுதியில் மூளைக்கு செல்லும் முக்கியமான ரத்தக்குழாய் அருகில்  7.5 செ.மீ. அளவு நீளம் கொண்ட தையல் ஊசி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக இளம்பெண்ணிடம் டாக்டர்கள், கேட்டபோது, முதலில் பிளேடு மூலம் கழுத்தை அறுத்து கொண்டதாகவும், பின்னர் தையல் ஊசி மூலம் குத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் ஆலோசித்து அறுவை சிகிச்சை செய்து தையல் ஊசியை எடுக்க முடிவு செய்தனர்.

பின்னர், நவீன சி ஆர்ம் எக்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டு எவ்வித பாதிப்புமின்றி ஊசியை டாக்டர்கள் குழுவினர் துல்லியமாக வெளியே எடுத்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி தற்போது ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். அவருக்கு டாக்டர்கள் கவுன்சலிங் அளித்து வருகின்றனர். மேலும், ஊசியை வெற்றிகரமாக அகற்றிய இ.என்.டி. துறைத்தலைவர் டாக்டர் அலி சுல்தான், டாக்டர்கள் நல்லசிவம், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் வெங்கடேஷ், ஆனந்த சண்முகராஜ், மயக்கவியல் நிபுணர் சத்யா மற்றும் மருத்துவ குழுவினரை மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டினர்.

Related Stories: