தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆயிர கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதுள்ளதால் முகாம்களில் மக்கள் தஞ்சம்

விழுப்புரம்: தென்பெண்ணை மற்றும் சரபங்கா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கண்ணீரில் மிதக்கின்றனர். வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்வதாலும் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறான கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனாதிமங்கலத்தை அடுத்துள்ள மாரங்கியூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக மாரங்கியூர், சேத்தூர், பையூர் உள்ளிட்ட கிராம மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதேபோல் தென்பெண்ணை ஆறு பாயும் கடலூர் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள ஆயிர கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு ராகவாம்பாள் அணைக்கட்டு நிரம்பி அருவி போல் தண்ணீர் கொட்டி வருகிறது. ஏரிகளின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.           

Related Stories: