×

வாகனஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்து சாலைகளில் திரிந்த 76 மாடுகள் பிடிப்பு-மாநகராட்சி ஆணையர் அதிரடி

திருச்சி : திருச்சி மாநகராட்சி பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வந்தன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டுமென மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாடுகளை பிடித்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3 நாட்களுக்குள் மாநகராட்சி கருவூலத்தில் அபராதத்தை செலுத்தி மாடுகளை உரிமையாளர்கள் ஓட்டி செல்லலாம். இல்லாவிட்டால் சந்தையில் மாடுகள் ஏலம் விடப்பட்டு அந்த தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள கோ.அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம், ரங்கம் ஆகிய கோட்டங்களிலும் நகர்நல அலுவலர் யாழினி மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர். அதன்படி கோ.அபிஷேகபுரத்தில் 20, ரங்கத்தில் 18, அரியமங்கலத்தில் 15, பொன்மலையில் 23 என மொத்தம் 76 மாடுகளை பிடித்து அந்தந்த கோட்ட மாநகராட்சி இடத்தில் கட்டி வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த 3 நாட்கள் மட்டும் மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளுக்கு அபராதம் செலுத்தாமல் மாடுகளுக்கான பராமரிப்பு தொகையை செலுத்திவிட்டு உரிமையாளர்கள் ஓட்டி செல்லலாம். இந்த தொகையையும் கட்டாவிட்டால் பிடிபட்ட மாடுகள் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy: Cattle were mostly roaming on the roads of Trichy Corporation area. This often led to accidents
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!