வாணியம்பாடி அருகே கனமழையால் பாதிப்பு நிலச்சரிவால் தமிழக- ஆந்திர எல்லை மலை சாலை துண்டிப்பு

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே கனமழையால் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள மலைச்சாலையில் நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக எல்லையில் ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய மலைச்சாலை உள்ளது. இச்சாலை ஆந்திர மாநிலம் குப்பம், ராம குப்பம், வீரணமலை வழியாக தமிழகத்திற்கு வரக்கூடிய பிரதான சாலை.

இந்த சாலை  தமிழக எல்லையான வெலதிகமாணிபெண்டா, சிந்தகாமணி பெண்டா, ஆகிய மலைச்சாலை வழியாக அண்ணா நகர், தும்பேரி வாணியம்பாடி வரக்கூடிய சாலையாகும். இந்த சாலை 2 ஆயிரம் அடி மலையில்  10 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டுள்ளது. இவ்வழியாக ஏராளமான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மலைசாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த் துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையை உடனே போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: