×

செங்கோட்டை மோட்டை அணை மறுகாலில் 20 மீட்டருக்கு உடைப்பு

சீரமைக்கும் பணிகள் தீவிரம்

செங்கோட்டை : செங்கோட்டை அருகேயுள்ள மோட்டை அணையின் மறுகாலில் 20 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டது.  பொதுப்பணித்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சீரமைத்தனர்.  செங்கோட்டையில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மோட்டை அணை. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 27 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, சுமார் 1.35 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டது.

 இதன் மூலம் 22 குளங்கள் வழியாக 366.15 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மோட்டை, தவணை, காடுவெட்டி, ஊரப்பத்து சுற்று வட்டார பகுதிகளில் 100 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 2 பூ மகசூல் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் முதலில் கட்டப்பட்ட அணை மோட்டை அணைதான். காமராஜர், முதல்வராக இருந்தபோது 1957ல் திட்டம் தீட்டப்பட்டு 1963ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

 கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மரங்கள், பாறைகள் மற்றும் மணல் அடித்து வரப்பட்டு 10 அடி வரை தேங்கியுள்ளது. தற்போது 17 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்குகிறது. இந்த அணையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாளைய கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதில் அணையின் பிரதான மறுகால் ஓடை அருகில் சுமார் 20 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது.


Tags : Red Fort Mottai Dam , Sengottai,Mottai Dam,Public Workd Department,Sand
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி