×

கொள்ளிடம் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடவு செய்த கிராமமக்கள்-சாலையை மேம்படுத்த கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமமக்கள் சேறும் சகதியுமான சாலையில் நடவு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக சாலையை மேம்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் கீழ்வடிகால் மதகு அருகே 30 மீட்டர் தூர சாலை மேம்படுத்தப்படாமல் கடந்த 8 ஆண்டுகளாக சேறும் சகதியுமாக இருந்து வருகிறது. தார்சாலை களிமண் சாலையாக மாறிவிட்டது.

அப்பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்றபோது தோண்டப்பட்ட மண் சாலையின் நடுவே போடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலும், அவசர காலத்தில் 108 ஆம்புலன்சை அழைத்தால் அதுவும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையின் அவலத்தால் இவ்வழியாக இயக்கப்பட்ட மினிபஸ் கடந்த ஐந்து வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் வகையிலும் உடனடியாக சாலையை மேம்படுத்த வலியுறுத்தியும் மாதிரவேளூர் கிராமமக்கள் சார்பில் நேற்று கீழ்வடிகால் என்ற இடத்தில் சாலையின் நடுவே சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் நடவு செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags : Kollidam , Kollidam: Villagers of Madiravelur near Kollidam protested by planting on a muddy road.
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி