×

தொடர்மழையினால் 30 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் பாலாற்றில் இரு கரையும் தொட்டபடி சீறிப்பாய்ந்த மழை வெள்ளம்

* வேடிக்கை பார்க்க திருவிழா போல கூடிய பொதுமக்கள்

* விபரீதம் ஏற்படும் முன் பாதுகாப்பு நடவடிக்கை தேவை

வேலூர் : தொடர்மழையினால் வேலூர் பாலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இரு கரையும் தொட்டபடி சீறிப்பாய்ந்த மழை வெள்ளத்தினை, கொட்டும் மழையிலும் வேடிக்கை பார்க்க திருவிழா போல மக்கள் கூட்டம் கூடினர். பாலத்தின் பக்கவாட்டு சுவர் வலுவிழந்துள்ளதால் விபரீதம் ஏற்படும் முன் பாதுகாப்பு நடவடிக்ைககள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை அதி தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஏரிகள், குளங்கள், விவசாய கிணறுகள் என்று நிரம்பி வழிகிறது. அதேசமயம் அதிக கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் பகுதியில் உருவாகி, ஆந்திரமாநிலம் வழியாக திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி, காஞ்சிபுரம், கல்பாக்கம் வழியாக சென்று தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தூரம் பயணித்து கடலில் சங்கமிக்கும் பாலாற்றில், மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாகவும், கர்நாடகமாநிலம் பேத்தமங்கலம் அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டதாலும், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ெபய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று காலை வேலூர் பாலாற்றில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள போளூர் சுப்பிரமணியம் பாலம், புதிதாக கட்டப்பட்ட அண்ணாபாலத்தின் இருகரைகளையும் தொட்டபடி பாலாற்றில் மழைவெள்ளம் சீறிப்பாய்ந்தோடி வருகிறது.

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகேயும், விருதம்பட்டு பகுதியில் உள்ள பாலாற்று பகுதிகளில் அதிகளவிலான ஆண்கள், பெண்கள் என்று திருவிழா போல பொதுமக்கள் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க குவிந்தனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை வெள்ளத்தினை பார்வையிட்ட பொதுமக்கள் செல்பி எடுத்துச்சென்றனர்.  

வேலூர் பாலாறு பழைய பாலம் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் புனரமைக்கப்பட்டது. இருப்பினும் பாலத்தின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவர்கள் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இந்த சுவற்றின் மீது சாய்ந்தும், குழந்தைகளை அமரவைத்தும் வேடிக்கை பார்க்கின்றனர். தொடர்மழை காரணமாக பாலாற்று சுவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அப்பகுதியில் உயிர்சேதம் ஏதேனும் ஏற்படும் முன், உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

கரையோரம் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள்

வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் புதிய பாலத்தின் அருகாமையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பாலாற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை வெள்ளம் சூழ்ந்த படி ெசல்கிறது. இதனால் அங்குள்ள வீடுகள் பாலாற்றில் அடித்து செல்லும் ஆபாயம் உள்ளது. ஆனாலும் அங்குள்ள வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறாமல், அங்கேயே வசித்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் அப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செல்பியால் செல்போனை விட்ட வாலிபர்கள்

வேலூர் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், பாலாற்றின் இருகரைகளையும் தொட்டபாடி வெள்ளம் சீறிப்பாய்கிறது. இதனை அவ்வழியாக செல்லும் ஆண்கள், பெண்கள் என்று செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இதில் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்களது செல்போன்களை பாலாற்றில் தவறவிட்டனர்.

Tags : Vellore Lake , Vellore: Heavy rains lash the Vellore Lake after 30 years, causing torrential rains to hit both banks.
× RELATED வேலூர் பாலாற்றுக்கரையில் பலத்த...