×

பொன்னை ஆற்றில் மூன்றாவது முறையாக கடும் வெள்ளப்பெருக்கு-வெள்ளத்தில் மிதக்கும் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள்

பொன்னை :  வேலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி பொன்னை ஊராட்சியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால், எஸ்.என்.பாளையம் பகுதியில் ஒரு பசுமாடும், கீரைசாத்து ஊராட்சியில் குலாப் என்பவருக்கு சொந்தமான 2 ஆயிரம் வாத்து குஞ்சுகள் மற்றும் மோகன் என்பவருக்கு சொந்தமான 200 நாட்டு கோழிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

கீரைசாத்து ஊராட்சியில் உள்ள மின் வாரிய சப்-ஸ்டேஷன் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதிகளில் மின்சப்ளை தடைசெய்யப்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், மின்வாரிய அலுவலகத்தில் இருந்த 3 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டதால், அப்ப்குதி பொதுமக்கள் சுமார் 4 மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர்.
மேலும், கீரைசாத்து பகுதியில் மினி லாரி மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டதால், அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்று மினி லாரியில் இருந்த 2 பேரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். அதில் மினி லாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து பொன்னை காவல் நிலைய எஸ்ஐ சண்முகம், எஸ்எஸ்ஐ குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆற்று வெள்ளத்தில் இருவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த பொன்னை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், தொடர் மழையின் காரணமாக கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதையடுத்து கீரைசாத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்.

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த ஆரகொல்லப்பள்ளி கோட்டாற்றில்  வெள்ளம், நேற்று கிராமத்திற்குள் புகுந்ததால், மோகன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்குள் வெள்ளம் புகுந்து அதில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி பலியானது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி தாமரைகுளம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு  சொந்தமான 20க்கும் மேற்பட்ட ஆடுகள், 2 மாடுகள் கன மழையால் 18 ஆடுகள், ஒரு மாடு இறந்து கிடந்தது. இதுகுறித்து, தகவலறிந்த சேர்பாடி விஏஓ செல்வராஜ், கவுன்சிலர்  பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவலம்: காட்பாடி தாலுகா திருவலம் பொன்னையாற்றில் ஆந்திராவில் பெய்யும் மழையால், பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கிற்கு பிறகு, நேற்று காலை முதல் ஆற்றின் இருக்கரைகளையும் தொட்டப்படி முழு கொள்ளளவு நிரம்பி பெரும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இரும்பு பாலத்தினை தொடும் நிலையில் செல்கிறது. இதனை அப்பகுதியினர் செல்பி எடுத்து சென்றனர்.

Tags : Ponnai: Due to heavy rains in the last few days in the vicinity of Vellore district, the lake has been flooded.
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா