திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை செய்யாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு-தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிப்பு, தரைப்பாலம் மூழ்கிய காரணங்களால் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ள ஜவ்வாது மலையில் இருந்து உற்பத்தியாகும் செய்யாறு ஆறானது செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு வழியாக சென்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக செய்யாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் 15 சென்டி மீட்டர் மழை பெய்தது.

மேலும், மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவு 15 சென்டி மீட்டராக பதிவாகி இருந்தது. இதுதவிர, ஜவ்வாதுமலை, செங்கம், ஆரணி, படவேடு, கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளமும், செய்யாறில் கலந்து வருகிறது.இதனால் நேற்று அதிகாலை முதல் தண்டரை அணைக்கட்டு வழியாக செய்யாற்றில் 30 ஆயிரம் கனஅடி நீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் இவ்வளவு வெள்ளம் பாய்ந்து செல்வதாக தண்டரை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பாதுகாப்பு கருதி தண்டரை அணைக்கட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையிலான பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

45 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வெள்ளம்: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் செய்யாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், படவேடு அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து 6,800 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் செய்யாற்றின் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 1975, 1985, 1996,  2016ம் ஆண்டுகளில் செய்யாற்றில் இருகரை தொட்டபடி வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. இதில் 1975, 1985ம் ஆண்டுகளில் செய்யாறு நகரில் உள்ள ஆற்று மேம்பாலத்தின் கீழ் சுமார் 5 அடி உயரம் வரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இந்நிலையில், சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆற்று மேம்பாலத்திற்கு சுமார் 7 அடி உயரம் வரையில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் ஆற்றுப்பாலம் வழியாக வந்தவாசி செல்லும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றன.

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் பகுதி வழியாக செய்யாறுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையின் குறுக்கே ஆரணி- வந்தவாசி பிரதான சாலையில், நூற்றாண்டை கடந்த அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் 147 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.  இந்த அணைக்கட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட தண்ணீரை, பொதுப்பணித்துறையினர் ஷெட்டர்களை திறந்து, ஆற்றுப்படுகை மற்றும் கால்வாய் வழியே தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரித்து வருகிறது. எனவே, நேற்று முதல் ஆறு மற்றும் கால்வாய் பாசன ஷெட்டர்களை மூடி, ஆற்றுப்படுகையில் தண்ணீர் செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணியாபுரம் செய்யாற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை காண மக்கள் அங்கே குவிவதால் சுற்றுலா தலம்போல் மாறியுள்ளது.

ஆரணி- வந்தவாசி போக்குவரத்து துண்டிப்பு: பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் செய்யாற்றுப்படுகை அணைக்கட்டு வழியாக வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த வெள்ளம் ஆரணி- வந்தவாசி பிரதான சாலையில் வழிந்து செல்வதால், பொதுமக்களும், வாகனங்களும் தட்டுத்தடுமாறி சென்று வந்தனர்.தகவலறிந்த வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜகணபதி, உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் வெங்கடேசன், சாலை ஆய்வாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் விரைந்து சென்று, எச்சரிக்கை பேனர் வைத்து, கயிறு கட்டி போக்குவரத்தை துண்டித்தனர்.

ஆரணி- வந்தவாசி பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பிரதான சாலையில் இருந்து பெரணமல்லூர் செல்லும் தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் அந்த வழியும் மூடப்பட்டது.கலசபாக்கம்: தொடர் மழை காரணமாக கலசபாக்கம் பகுதிகளில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக நெல், கரும்பு, மணிலா, மரவள்ளிக்கிழங்கு, மலர் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பல்வேறு கிராமங்களில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அதேபோல் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், செய்யாற்றில் கடந்த 5 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

வீடு இடிந்து சேதம், வயல்கள் நீரில் மூழ்கியது

பெரணமல்லூர் பேரூராட்சியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள 2 ஏரிகளும் நிரம்பி வழிந்து வருகிறது. பெரும்பாலான வயல்கள் நீரில் மூழ்கி உள்ளது. கனமழை காரணமாக பஜார் வீதியில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. தகவலறிந்த விஏஓ சேதமடைந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கலசபாக்கம் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், பழங்கோயில், பில்லூர், மேட்டுப்பாளையம், அணியாலை, காம்பட்டு, பத்தியவாடி, தென்மகாதேவ மங்கலம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More