×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த வரலாறு காணாத கனமழையால் அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆந்திர பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேயன் நதியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 7,026 கனஅடியாகவும், தண்ணீர் திறப்பு 8,409 கனஅடியாகவும் இருந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி அது 16,600 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 19,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஊத்தங்கரை அருகில் உள்ள பாம்பாறு அணை, ஓசூர் அருகில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் மொத்தம் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாம்பாறு அணைக்கு விநாடிக்கு 8123 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 7999 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மொத்த உயரமான 19.60 அடியில், தற்போது 19.36 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகே பரசனை ஏரி நிரம்பி, அருகே உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 60 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதையடுத்து, அங்கு வசிக்கும் 200க்கும் மேற்பட்டோர், ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை வழியாக திருவண்ணாமலைக்கு பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமந்தீர்த்தம், பாவக்கல், சிங்காரப்பேட்டை வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. வேப்பனஹள்ளியில் பெய்த மழையால், ஏக்கல் நத்தம் கிராமத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு வசிக்கும் மலை கிராம மக்கள், கீழ் பகுதிகளுக்கு வர முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சூளகிரி அடுத்த அத்திமுகம், செட்டிப்பள்ளி, பிளாலம், ஒட்டர்பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், கும்பளம் சாலையின் குறுக்கே உள்ள சிறிய பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:ஊத்தங்கரையில் 136.80, பெனுகொண்டாபுரம்- 115.16, போச்சம்பள்ளி- 112.20, பாரூர் -105.40, கிருஷ்ணகிரி- 102.40, தேன்கனிக்கோட்டை- 101, சூளகிரி- 97, ஓசூர்- 94.60, நெடுங்கல்- 87.60, தளி- 36, ராயக்கோட்டை- 33, அஞ்செட்டி- 27 என மொத்தம் 1047.96 மிமீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில், அதிகபட்சமாக நேற்று தான் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விட்டதால், உபரிநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தரைபாலங்களை யாரும் கடக்க வேண்டாம் என்றும், நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் கால்நடைகளை அனுமதிக்க கூடாது என்றும், குழந்தைகளை பெற்றோர்கள் ஆற்றுபகுதியில் அனுமதிக்க கூடாது என்றும் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்தும், கண்காணித்தும் வருகின்றனர்.

Tags : Krishnagiri district , Krishnagiri: In Krishnagiri district, unprecedented heavy rains yesterday caused floods in dams.
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை