ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுப்பணி வழங்குக: ஜி.கே.வாசன்

சென்னை : தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலில் திறமை மிக்க ஆசிரியர்களின் பணி அடிப்படையானது.

அந்த வகையில் ஆசிரியர் பணிக்கு தகுதியுடையவர்கள் அரசுப்பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பணி கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். அதாவது 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக அரசுப்பணி கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆசிரியர்கள் அரசுப்பணி வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

தமிழக அரசு, அரசுப்பணிக்காக போராடிய ஆசிரியர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திமுக வின் தேர்தல் அறிக்கையில் (177) ல் 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பில் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் பதிவு மூப்பு அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே தமிழக அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: