×

பாலைவனத்தில் மழையைக் கொண்டுவரும் பெண்களின் நடனம்!

நன்றி குங்குமம் தோழி

1975-ம் வருடத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. குஜராத்தின் கட்ச் பாலைவனத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். மின்சாரம், தண்ணீர் உட்பட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத அந்தக் கிராமத்தில் இருபது, முப்பது மண் குடிசைகள் அழகழகாக வீற்றிருக்கின்றன. அந்த கிராமத்தை நிர்வாகம் செய்ய ஒரு பஞ்சாயத்து தலைவரும் இருக்கிறார். பெண்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டுமே  செய்ய வேண்டும். வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். குடிசையை விட்டு வெளியே வரவே கூடாது.

அடுத்த வீட்டுக்குப் போய் அங்கிருக்கும் பெண்களுடன் பேசக்கூடாது. முக்கியமாக அவர்களுக்கு விருப்பமான எந்த ஒன்றையும் செய்யக்கூடாது. வீட்டுத் தலைவனான ஆண் சொல்படி நடக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள்; கட்டுப்பாடுகள். கட்டுப்பாடுகளை மீறினால் அடி விழும். ஆண்களின் உடல் மற்றும் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒன்றாக மட்டுமே அங்கே பெண் பாவிக்கப்படுகிறாள்.  

இப்படியான ஓர் இடத்தில் பெண்களின் வாழ்க்கை மட்டுமல்ல, ஆண்களின் வாழ்க்கையும் அங்கே ஆமையைப் போல மெதுவாக நகர்கிறது. இந்தச் சூழலில் நகரவாசியான மஞ்சரி என்ற பெண் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரனுக்கு மணமுடிக்கப்படுகிறாள். கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் மஞ்சரியை வீட்டிலேயே விட்டுவிட்டு அவர் எல்லைக்குப் போய்விடுகிறான்.

இதற்கிடையில் அந்தக் கிராமத்தில் ஒரு பெண் தனக்குப் பிடித்தமான எம்ப்ராய்டரி வேலையை ரகசியமாக செய்து வந்தாள். எம்ப்ராய்டரி செய்த துணிகளை தனக்குத் தெரிந்தவர் மூலம் சந்தையில் விற்று வருமானம் ஈட்டி வந்தாள். அந்தக் கிராமத்தில் வாழும் ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் வருமானம் ஈட்டுவது அவர்கள் தங்களை விற்பதற்குச் சமம். அதனால் பெண்கள் எந்த வேலைக்கும் போக முடியாது. ஒரு நாள் அந்தப் பெண் எம்ப்ராய்டரி செய்வது ஆண்களுக்குத் தெரிந்துவிடுகிறது. உஷாரான பெண் வீட்டைவிட்டு தனக்கு உதவிய ஆணுடன் ஓடுவிடுகிறாள். அவள் அப்படி ஓடிப்போனதால் தான் கிராமத்தில் மழையே பெய்வதில்லை என்று ஆண்கள் ஒரு கட்டுக்கதையைக் கட்டி மேலும் பெண்களை அடிமையாக்குகிறார்கள்.

ஒவ்வொரு இரவும் மழையை வேண்டி ஆண்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து நடனம் ஆடுகிறார்கள். இதைப் பார்ப்பதற்குக் கூட பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் எவ்வளவு நடனம் ஆடியும் கடவுளிடம் வேண்டியும் மழை பெய்வதே இல்லை. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கவும், பேசவும் விரும்புகின்றனர். அதனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஏரியில் தண்ணீர் எடுக்க கூட்டமாகச் செல்கின்றனர். ஒவ்வொரு நாள் காலையும் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது மட்டுமே அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இப்படி ஒரு நாள்  தண்ணீர் எடுக்கப்போகும்போது வழியில் ஒருவர் மயக்கமடைந்து கிடக்கிறார். தாகத்தால் அவர் உயிர் போய்க்கொண்டிருக்கிறது. பெண்கள் யாரும் உதவ முன்வருவதில்லை.

வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்று பயம். ஆனால், அதில் ஒரு விதவைப் பெண் உதவ நினைக்கிறாள்.  ஆனால், அவளால் முடிவதில்லை. அவளுடன் மற்ற பெண்கள் பேசுவதில்லை. ஆண்களின் கட்டளையால் அவளை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்தக் கிராமத்துக்குப் புதிதாக வந்த மஞ்சரி தண்ணீர் கொடுக்கிறாள். தாகத்தில் இருந்து மீண்ட அவர் ஒரு மத்தளம் வாசிப்பவர் என்று  தெரியவருகிறது. தன்னைக் காப்பாற்றிய பெண்களுக்காக அவர் மத்தளம் அடிக்க, அந்த தாள நயத்துக்கு இயைந்து நடனமாடுகிறாள் மஞ்சரி.  அவளைத் தொடர்ந்து மற்ற பெண்களும் நடனமாடுகிறார்கள். அவர்கள் அப்படி நடனமாடுவது அதுவே முதல்முறை. இந்த நடனம் ஒவ்வொரு நாளும் தண்ணீர்
எடுக்கப்போகும்போது ரகசியமாக அரங்கேறுகிறது.

பெண்கள் நடனமாடுவது ஆண்களுக்குத் தெரியவர பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் கணவனால் கடுமையாகத் தாக்கப்படுகிறாள். மத்தளம் அடித்தவரைப் பிடித்துவந்து கடவுளுக்குப் பலிகொடுக்க தீர்மானிக்கிறார்கள். அப்படி பலிகொடுப்பதற்கு முன் அவரிடம் கடைசி ஆசை என்னவென்று கேட்கப்படுகிறது. அவர் மத்தளம் அடிக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் மத்தளம் அடிக்க, வீட்டை விட்டு துணிச்சலுடன் வெளியே வரும் மஞ்சரி நடனமாடுகிறாள்.

கணவனால் தாக்கப்பட்டு அவளின் முகத்தில் ரத்தம் வடிந்துகொண்டிருக்கும் சூழலில் கூட  அவள் நடனமாடுவதைக் கண்ட மற்ற பெண்கள் ஒவ்வொருவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து ஆண்கள் முன்பு தைரியமாக நடனமாடுகிறார்கள். பெண்களின் நடனத்தைக் கண்டு ஆண்கள் வாயடைத்துப் போகிறார்கள். பல வருடங்களாக ஆண்களின் நடனத்துக்கு இசையாத மேகம், பெண்களின் நடனத்துக்கு மழையைப் பொழிகிறது. அந்த மழையின் ஈரம் நம் மனதுக்கு இறங்க படம் நிறைவடைகிறது.

இந்தியாவில் பெண்கள் ஆண்களால் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். அவர்களின் உணர்வுகளும் ஆசைகளும் எப்படியெல்லாம் மறுக்கப்பட்டன என்பதை ஆழமாக சொல்வதுடன்,  இதையெல்லாம் தாண்டி பெண்கள் எப்படி எழுந்து வந்து தங்களை தகவமைத்துக்கொண்டார்கள் என்பதையும் அழகாக சொல்லும் இப்படத்தை இயக்கியவர் அபிஷேக் ஷா. 2019-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் தட்டியிருக்கிறது ‘ஹெல்லோரா’.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : desert ,
× RELATED சென்னை சுற்றுவட்டாரங்களில் அதிகாலை முதல் கனமழை