×

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சோகம் வீடு இடிந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பலி: படுகாயங்களுடன் 9 பேருக்கு தீவிர சிகிச்சை

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கொட்டாற்றங்கரையில் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் பேரணாம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக ஆறுகளிலும், சிற்றாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பேரணாம்பட்டு ஏரிக்கால்வாய் ஓரம் 50க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரிக்கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டதால் வருவாய்துறையினர் அங்கிருந்தவர்களிடம், குடியிருப்புகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கும்படி அறிவுறுத்தினர்.

அவர்களில் பெரும்பாலானோர் முகாம்களுக்கு சென்று தங்கினர். சிலர் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் சென்று தங்கினர். இதில் அங்குள்ள சிலர் குழந்தைகளுடன் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி அருகே கொட்டாற்றங்கரையையொட்டியுள்ள முஸ்லீம் தெருவில் காலியாக இருந்த உறவினர் ஹபீப் என்பவரின் பழைய வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். இதில் கொட்டாற்றங்கரையோரம் இருந்த ஹபீப் என்பவரின் பழைய வீடு மழையால் நனைந்திருந்த நிலையில் நேற்று காலை 7.45 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் திரண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வீடு இடிந்த விழுந்த விபத்தில் மர்கூம் அஸ்லம் அன்சாரி என்பவரது மனைவி அனீஷா(54), ஷன்னு அன்சாரி என்பவரது மனைவி மிஸ்பா பாத்திமா(21) மற்றும் தன்சீர் மகன் மன்னுல்லா(13), ஹபீப் மனைவி ருஹி(25), மகள் அப்ரா(6), மகன் தஹாமில்(4), முகமது தாசீன் மனைவி கவுசீர் (50), மகள் தன்சீலா(30), இலியாஸ் மகள் அபீரா(3) என்று 5 பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட  ஹன்னா(7), ஷன்னு அன்சாரி (23), தவுபீக்(19), தவுசீப்(28), ஹபீப்(30), நசீரா(50), ஹஜீரா(30), அவரது மகன் மொய்தீன்(6), நூர் மகள் ஹஜீரா(8) 9 பேர் படுகாயங்களுடன் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த மொய்தீன்(6), ஹஜீரா(30), நூர் மகள் ஹஜீரா(8) ஆகிய 3 பேர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அமைச்சர்கள், துரைமுருகன், ஆர்.காந்தி, எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன் உள்ளிட்டோர்  சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில், யாரேனும் வீடுகளில் தங்கியுள்ளனரா? என்று அதிகாரிகள் உறுதிபடுத்திவிட்டு, அப்பகுதிக்கு யாரும் செல்லாதபடி பேரிகார்டுகள் வைத்தனர். வீடு இடிந்து 9 ேபர் பலியானது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Peranampattu ,Vellore district , Vellore District, Peranampattu, house collapse, death, intensive care
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...