×

நீர்வரத்து கால்வாயில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர், கட்டிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், 13வது வார்டு, சீனிவாசபுரம், மீனாட்சி நகரில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றி நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது. பொது பணித்துறைக்கு சொந்தமான நீர்வரத்து கால்வாயில், சுமார் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்து, அதில் பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்டோர் ரூம் ஆகியவை கட்டப்பட்டு இருந்தது. இதேபோல், அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

பொத்தேரி, எஸ்ஆர்எம், வல்லாஞ்சேரி  வழியாக வரும் மழைநீர் கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே சென்று கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் கலக்கிறது. இதில், நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் நிரம்பி, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள், கலெக்டரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கலெக்டரின் உத்தரவுபடி, தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் வசந்தி மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கொட்டும் மழையில் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது, நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்தது தெரிந்தது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நந்தகோபால், எஸ்ஐ சதாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நீர்வரத்து கால்வாயில் கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் மற்றும் ஸ்டோர் ரூம், 2 சிசிடிவி கேமிரா ஆகியவற்றை அதிரடியாக இடித்து தள்ளினர். தொடர்ந்து, அப்பகுதியில் நீர்வரத்து கால்வாய் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Watershed Canal , Irrigation, canal, private school, perimeter wall, government land reclamation
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை