×

பாலாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாயம்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: அணைக்கட்டுகளில் இருந்து பாலாற்றுக்கு உபரிநீர் வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு வடிநில பகுதிகளில் பெய்த கனமழையால் மேற்புரம் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகிறது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் பாலாற்றுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த கனமழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் பாலாற்றில் விடப்படுகிறது. மேலும் உபரிநீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் உத்திரமேரூர் வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. நேற்று உபரிநீர் 14 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. இதனால் 2 ஆறுகளிலும் அதிகளவு தண்ணீர் செல்வதால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் பாலாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டாட்சியர்கள் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து உடனே அறிக்கை தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலாறு கரையோரத்தில் உள்ள பெரும்பாக்கம், முத்துவேடு, பிச்சிவேடு, விஷார், நரப்பாக்கம், விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிமேடு, புஞ்சை அரசன்தாங்கல், அவலூர், வெள்ளிமேடு, கம்மராஜபுரம், கன்னடியன்குடிசை, சித்தாத்தூர், இளையனார்வேலூர், காவாந்தண்டலம், காலூர், ஆசூர், வரதராஜபுரம், மாகரல் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட கிராம மக்கள் பாலாறு பகுதிகளுக்கு செல்லவோ, செல்பி எடுக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, சிறுவர்கள் ஆற்றின் அருகில் செல்லவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றின் அருகில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags : Balaru, coastal villages, flood risk, Collector warning
× RELATED மதுரை சித்திரை திருவிழா: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஏப்.21ம் தேதி ஆய்வு