100 ஆண்டுகளில் காணாதபடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு கர்நாடக மாநிலம், கோலார் நந்தி துர்கம் மலை பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் 93 கிமீ, ஆந்திராவில் 33 கிமீ பாய்ந்து தமிழகத்தின் வேலூர், வாணியம்பாடி, புள்ளலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக 222 கி.மீ கடந்து கல்பாக்கம் அடுத்த வயலூர் பகுதியில் சென்று கடலில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த 10 நாட்களாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஆந்திர மாநிலம் புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆறுகளில் பாயும் வெள்ளமும் பாலாற்றில் கலக்கத் தொடங்கியுள்ளது. 1903 ம் ஆண்டு வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது, சற்று குறைவாக 1.04 லட்சம் கன அடி நீர் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படுகிறது. இதனால் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பழையசீவரம் பகுதி பாலாற்றில் கணக்கிடும்போது வினாடிக்கு 1.26 லட்சம் கனஅடி நீர் செல்கிறது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆற்றில் நீர் கலந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இதனால் காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாறு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More