×

கிரிக்கெட்டில் இருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்க நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக அளவில் தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை மகிழ்வித்தவர் ஆப்ரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் (37). தென் ஆப்ரிக்க அணி  விக்கெட் கீப்பராக இருந்த ஏபிடி, பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சை தவிடுபொடியாக்குவதில் வல்லவர். இவர் 2018ம் ஆண்டு  சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து அதிர்ச்சியளித்தார். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சமாதான முயற்சிகள் பலன் தரவில்லை.  2019ல் நடந்த ஒருநாள் உலக கோப்பை மற்றும் சமீபத்தில் அமீரகத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க ஏபிடி ஆர்வம் தெரிவித்தாலும், அதனை கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.

எனினும், ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்களில் பல்வேறு நாடுகளில் விளையாடி வந்தார். ஆர்சிபி அணியில், கேப்டனாக இருந்த கோஹ்லியுடன்  நெருக்கமாக இருந்தார்.  இருவரும் நன்றாக விளையாடியும் அந்த அணிக்கு கோப்பை கிடைக்கவில்லை. டி20 கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகிய நிலையில், ‘அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்’ என்று டி வில்லியர்ஸ் நேற்று அறிவித்துள்ளார்.

கோஹ்லி: நமது காலத்தில் சிறந்த வீரர். எனக்கு உத்வேகம் தரும் நபர்.  என் சகோதரனே... ஆர்சிபிக்கு நீங்கள் அளித்த பங்களிப்பிற்காக பெருமைப் படலாம். விளையாட்டுக்கு வெளியேயும் நமது உறவு தொடரும். ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள்/இந்நாள் கிரிக்கெட் வீரர்கள்,  ரசிகர்கள் உள்பட பலரும்  ஏபிடிக்கு வாழ்த்துகளையும்,  அவருடன் இருந்த தருணங்களையும்  சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



Tags : De Villiers , Cricket, de Villiers, Retired
× RELATED அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த...