×

ஆளுங்கட்சியின் அவமதிப்பால் மனம் நொந்து அழுகை ஆட்சியை பிடித்த பிறகு தான் சட்டப்பேரவைக்கு வருவேன்: ஆந்திராவில் சந்திரபாபு சபதம்

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இவர் பதவிக்கு வந்தது முதல், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார். சட்டப்பேரவையில் அவருடைய கட்சி எம்எல்ஏ.க்கள், சந்திரபாபுவை தொடர்ந்து அவமதிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று விவசாயத் துறை சம்பந்தப்பட்ட விவாதம் நடைபெற்றது.

அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏ.க்கள், சந்திரபாபுவை அவமதிக்கும் வகையில் பேசினர். இதனால் உணர்ச்சி வசப்பட்ட சந்திரபாபு, ‘‘ஆளும் கட்சி என் மீது தொடர்ந்து சேற்றை வாரி வீசி வருவது வேதனை அளிக்கிறது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக, இந்த அவமதிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு அமைதி காத்து வருகிறேன். இன்று இவர்கள், எனது மனைவியை கூட களங்கப்படுத்துகின்றனர். இந்த அவமானங்களை இனிமேல் என்னால் சகித்து கொள்ள முடியாது,’’ என்றார்.

 அவர் தொடர்ந்து பேச முற்பட்டபோது, சபாநாயகர் தமினேனி சீதாராம், சந்திரபாபுவின் மைக் இணைப்பை துண்டித்தார். மேலும், சந்திரபாபு நாடகமாடுவதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறி, நகைத்தனர். இதனால்,  சந்திரபாபு அவையை விட்டு வௌியேறினார். பின்னர், தனது கட்சி எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுங்கட்சியின் அவமதிப்புகள் பற்றி அவர்களிடம் பேசியபோது, அவர் துக்கம் தாங்காமல் அழுதார். எம்எல்ஏ.க்கள் அவரை தேற்றினர். பிறகு, மீண்டும் அவைக்கு வந்த சந்திரபாபு, ‘இனிமேல் இந்த சட்டப்பேரவைக்கு வர மாட்டேன். மீண்டும் ஆட்சியை பிடித்த பிறகுதான் வருவேன்,’ என அதிரடியாக அறிவித்து விட்டு வெளியேறினார்.


Tags : Chandrababu ,Andhra Pradesh , Ruling party, mourning, rule,Legislators, Chandrababu vows
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...