வீட்டுக்கு போக மாட்டோம் போராட்டம் தொடரும்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தபோது,   பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத், மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் திகைத் இருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘3 வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும். குறைந்தப்பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க, சட்டப்பூர்வமான  உத்தரவாதம் அளிக்க வேண்டும். இது நடக்காமல், போராட்ட களத்தில் இருந்து விவசாயிகள் வீடு திரும்ப மாட்டார்கள்.  

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்தை இனிப்புகள் வழங்கி கொண்டாடக் கூடாது. போராட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச  ஆதரவு விலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி  வருகிறது.’’ என்றார். இந்நிலையில், போராட்டத்தின்அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவசாயிகள் சங்கம், டெல்லியில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது.

பிடிவாதம் பிடிக்காதீர்கள்

ஒன்றிய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை, பிரதமர் மோடி பெரிய மனதுடன் எடுத்துள்ளார். இந்த சட்டங்களை எதிர்த்த சிறிய அளவிலான விவசாயிகளின் நலனை கருதி, அவர் எடுத்த இந்த முடிவை விட பெரிய முடிவு வேறு இருக்க முடியுமா? எனவே, விவசாயிகள் வீட்டுக்கு திரும்ப, விவசாயத்தை கவனிக்க வேண்டும். போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்க தலைவர்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது,’’ என்றார்.

காங். இன்று வெற்றி கொண்டாட்டம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், `விவசாயிகளுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சியின் தவறான முடிவுகளுக்கு எதிராக அவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தினால் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனை அங்கீகரிக்கும் வகையில் நாளைய தினம் (இன்று) நாடு தழுவிய அளவில் கட்சியின் சார்பில் `கிசான் விஜய் திவஸ்’ (விவசாயிகள் வெற்றி தினம்) கொண்டாடப்படும். இதற்காக, அனைத்து மாவட்டங்கள், மண்டலங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த வேண்டும். போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற  உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More