2020 நவம்பர் 26 முதல்... ஓராண்டு போராட்டம் கடந்து வந்த பாதை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடங்கினர். உலகத்தின் கவனத்தை ஈர்த்த, இப்போராட்டத்தின் சில முக்கிய நிகழ்வுகள்…

ஜூன் 5, 2020: நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது.

செப். 17, 2020: மக்களவையில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.

செப், 20, 2020: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்.

செப். 25, 2020: நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்.

செப். 26, 2020: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் விலகியது.

செப். 27, 2020: புதிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல். அரசிதழில் வெளியானது. தொடர்ந்து அவை சட்டங்களாக நடைமுறைக்கு வந்தன.

நவ. 25, 2020: பஞ்சாப், அரியானாவில் உள்ள விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி பேரணி புறப்பட்டனர். போலீசார் அனுமதி மறுத்தனர்.

நவ. 26, 2020: அரியானாவிலிருந்து டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி விரட்டினர். டெல்லி எல்லையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.

டிச. 3, 2020: விவசாயிகள் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு முதல் முறையாக அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்தியது.

டிச. 9, 2020: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால், ஒன்றிய அரசின் திட்டத்தை விவசாயிகள் சங்கத்தினர் நிராகரித்தனர்.

டிச. 11, 2020: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரதீய கிசான் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டிச. 16, 2020: பலகட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் ஒன்றிய அரசு மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் ஆலோசனை கூறியது.

ஜன. 12, 2021: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

ஜன. 26, 2021: குடியரசு தினத்தன்று விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் டெல்லியை நோக்கி நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் சங்க கொடியை சிலர் ஏற்றினர்.

மார்ச் 6, 2021: விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை எட்டியது.

மே 27, 2021: ஆறு மாத போராட்டத்தை நிறைவு செய்த விவசாயிகள் கறுப்பு தினத்தை அனுசரித்தனர்.

ஜூலை 2021: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் விவசாய அமைப்புகள் சார்பில் மாதிரி மழைக்காலக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆக. 7, 2021: நாடாளுமன்ற வளாகத்தில் 14 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தின.

செப். 11, 2021: விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்.22, 2021: போராட்டம் நடத்துவது மக்கள் உரிமை. அதை ஒடுக்க சாலைகளை முடக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டனம்.

அக். 29, 2021: காஜிப்பூர் எல்லையில் இருந்த கான்கிரீட் வேலிகள் உள்ளிட்ட சாலை தடுப்புகளை போலீசார் அகற்றினர்.

நவம்பர் 19 (நேற்று), 2021: பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை நினைவு கூரும் வகையில் அன்றைய தினம் டெல்லி போராட்ட களத்தில் பல ஆயிரம் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More