நானும் விவசாயி தான் என்று ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டம் ரத்துக்கு மவுனம் காக்கும் எடப்பாடி

சென்னை:  ஒன்றிய பாஜஅரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை  எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லியில் அனைத்து மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழக சட்டப்பேரவையிலும் இது போன்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அதிமுக அரசை வலியுறுத்தின. ஆனால், அப்போதைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம்.

எதிர்க்கட்சித் தலைவரைப் போல் விவசாயத்தைப் பற்றியோ, விவசாயிகளின் நலனைப் பற்றியோ நான் அறியாதவன் அல்ல. விவசாயிகளின் நலன் கருதியை இந்த சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேட்டியளித்தார். பொதுக்கூட்டத்திலும் இந்த  கருத்தை தெரிவித்தார்.  இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீரென அறிவித்தார். மேலும் இந்த சட்டம் கொண்டுவந்ததாக மன்னிப்பு கோருகிறேன் என்றும் விளக்கம் அளித்தார். ஒன்றிய அரசு ஒரு வருடத்திற்கு பிறகு வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதே போல தமிழகத்திலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேளாண் சட்டம் ரத்து குறித்து அறிக்கை வாயிலாகவும், பேட்டி வாயிலாகவும் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இது தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தற்போது அனல் பறக்கும் விவாதமாக மக்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

Related Stories:

More