×

ஜன.20க்கு பிறகு கல்லூரி தேர்வுகள்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை:  கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள்  நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்ததை எதிர்த்து பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்ததை நடத்தினர். அதற்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: பேச்சுவார்த்தையில் 11 மாணவர்கள் அமைப்புகள் பங்கேற்றன. அவர்களின் கருத்தை கேட்டோம்.  அவர்களின் முதன்மையான கோரிக்கை என்னவென்றால், ஆன்லைன் தேர்வு வேண்டாம். நேரடி தேர்வை நடத்துங்கள், அதற்கு  கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர்.

பொறியியல் கல்லூரிகள் திறந்து நான்கரை மாதம் தான் கடந்துள்ளது. அதனால் ஒழுங்காக பாடங்களை நேரடியாக நடத்துவதற்கும் அதை கேட்பதற்கும் கால அவகாசம் வேண்டும். குறிப்பாக,  ஒரு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர். இரண்டு மாதம் கால அவகாசம் தருவதாக நாங்கள் தெரிவித்தோம்.  ஜனவரி 20ம் தேதியில் இருந்து அனைத்து அரசுக் கலைக் கல்லூரிகள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்திலும் இந்த தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டு அந்த வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும். அதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. நேர்மையான முறையில் தேர்வுகள் நடக்கும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மாணவர்கள் விடாமல் கல்லூரிக்கு வர வேண்டும். தினமும் பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்படும். செமஸ்டர் பாடத்திட்டம் முடித்து மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதை அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொண்டனர்.  அடிக்கடி மாணவர்களை அழைத்து பேசி முடிவுகளை எடுப்போம். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களும் இதை பின்பற்றி தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Tags : Minister ,Ponmudi , College Examinations, Minister Ponmudi, Announcement
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...