×

பக்தர்களிடம் பணம் பெற்று தரிசனத்துக்கு அனுமதி: திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் 2 பேர் இடமாற்றம்

சென்னை: திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் வெளியூர், வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சஷ்டி, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம், ரூ.150, ரூ.250 சிறப்பு தரிசனம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சிறப்பு தரிசன கட்டணத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ.2 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு மூலவர் சன்னதி கருவறை அருகே சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதற்காக, கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், புரோக்கர்கள் சிலருடன் கைகோர்த்து கொண்டு தினமும் பல ஆயிரம் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க கோயிலில் சிசிடிவி கேமராவை மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில், வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் நேரில் விசாரணை நடத்தினார்.

அதில், கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், முறைகேடாக பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதித்ததற்கான வீடியோ ஆதாரங்கள் சிக்கியது. மேலும், குறிப்பிட்ட நேரங்களில் சிசிடிவி கேமராவை மறைத்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோயில் ஊழியர்களிடம் இணை ஆணையர் ஜெயராமன் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் முறைகேடாக பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்துக்கு அனுமதித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, உதவியாளர் வேலு என்பவரையும், எலக்ட்ரீசியன் குமார் என்பவரையும் பணியிட மாற்றம் செய்து  ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

60 ஆண்டுகால வரலாற்றில்...
திருத்தணி கோயில் ஊழியர்கள் பணியிட மாற்றம் குறித்து, ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நிர்வாக நலன் கருதி உதவியாளராக பணிபுரிந்து வரும் வேலு என்பவரை பணிமாறுதல் செய்து திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தற்போது காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தில் பணி நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. அதேபோன்று எலக்ட்ரீசியன் குமார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பணி நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 60 ஆண்டுகால அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலுக்கு முதன்முறையாக ஊழியர்களை பணி மாறுதல் செய்து அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Darshan ,Thiruthani Murugan Temple , Thiruthani Murugan Temple, Staff, Relocation
× RELATED மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை...