எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி: ஒன்றிய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது: தந்தையும் சிக்கினார்: ஐதராபாத்தில் தனிப்படை அதிரடி

சென்னை: திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக பாஜ பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டி பாபுவை தனிப்படை போலீசார் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர்.

ஆரணி ஜெயலட்சமி நகரை சேர்ந்தவர் புவனேஷ்குமார் (56). இவர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், ‘‘நான் பாஜ பிரமுகர். பாஜ நிர்வாகிகளான விஜயராமன் மற்றும் ரகோத்தமன் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. நடந்து முடிந்து 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடும் நபர்கள் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டுக்காக எனது சித்தப்பா மகள் வசந்திக்கு சீட்டு கேட்டு தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தோம். அப்போது இரண்டு நிர்வாகிகளும் என்னிடம், எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி மிகவும் பழக்கமானவர். உங்களுக்கு சீட்டு வாங்கி தருகிறோம் என உறுதி அளித்தனர்.அதற்காக 50 லட்சம் பணம் கேட்டனர். 50 லட்சத்தை இருவரிடமும் கொடுத்தேன். ஆனால் இருவரும் சொன்னபடி எங்களுக்கு சீட்டு வாங்கி கொடுக்க வில்லை. பின்னர் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, விஜயராமன் மற்றும் ரகோத்தமன் ஆகியோர் முறையாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பாஜ நிர்வாகிகள் 2 பேரிடம் இருந்து 50 லட்சத்தை திரும்ப பெற்று தர வேண்டும்’’ என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி பாண்டிபஜார் போலீசார் பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் பாஜ நிர்வாகிகளான விஜயராமன் மற்றும் ரகோத்தமன் ஆகியோர் எல்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக 50 லட்சம் பெற்று ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டி பாபு ஆகியோரிடம் கொடுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விஜயராமன் மற்றும் ரகோத்தமன் மற்றும் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை சிட்டி பாபு ஆகியோர் மீது போலீசார் மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டிபாபுவை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வந்து மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: