விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்: பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு: மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டங்கள் தொடர்பாக அனைத்து விவசாயிகளின் ஆதரவை பெற முடியாமல் போனதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.விவசாயத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், விலை உத்தரவாதம், பண்ணைச் சேவை சட்டம் மற்றும் வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம் ஆகிய 3 வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதுதொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுடன் 3 வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லையான காஜிப்பூர், சிங்கு, திக்ரி உள்ளிட்ட இடங்களில் உபி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். ஒன்றிய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதாகவும், சுமூக முடிவு எட்டும் வரை சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அரசு தரப்பில் யோசனை கூறப்பட்டது. ஆனால், சட்டத்தை நீக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. சர்ச்சைக்குரிய 3 சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் வரும் 26ம் தேதி ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி, போராட்டத்தை வலுப்படுத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். மேலும், அடுத்த ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் பாஜ.வுக்கு விவசாயிகள் போராட்டம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் பிறந்தநாளையொட்டி, நேற்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். அவர் பேசியதாவது: எனது 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை மிகவும் நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன். எனவே, பிரதமராக சேவை செய்ய 2014ல் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உயர்ந்தபட்ச முன்னுரிமையை வழங்கினேன். விவசாயிகளின் நிலைமையை சீர்படுத்த விதைகள், காப்பீடு, சந்தை, சேமிப்பு ஆகிய நான்குமுனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல தரமான விதைகளோடு வேம்பு கலக்கப்பட்ட யூரியா, மண்வள அட்டை, நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கியது.

விவசாயிகளின் கடின உழைப்பிற்குப் பயனாக அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க பல முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது மட்டுமின்றி, சாதனை எண்ணிக்கையில் அரசு கொள்முதல் மையங்களையும் நாங்கள் உருவாக்கினோம். எங்கள் அரசால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் கடந்த பல பத்தாண்டுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது. இதே போலத்தான், விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்களை கொண்டு வர வேண்டுமென, பல ஆண்டுகளாக நாட்டின் விவசாயிகளும், வேளாண் நிபுணர்களும், விவசாய அமைப்புகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு பல தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல விவசாய அமைப்புகள் இதனை வரவேற்று ஆதரவு தெரிவித்தன. ஆதரவளித்த அமைப்புகளுக்கும், விவசாயிகளுக்கும், தனி நபர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் நலனுக்காக குறிப்பாக, சிறு விவசாயிகளின் நலனுக்காக... வேளாண் துறையின் நலனுக்காக... கிராமப்புற ஏழை மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முழுமையான நேர்மையுடன், தெளிவான உணர்வுடன் விவசாயிகள் குறித்த அர்ப்பணிப்புடனே இந்த சட்டங்களை அரசு கொண்டு வந்தது. ஆனால், இத்தகைய புனிதமான விஷயத்தை எங்களின் முயற்சிகளுக்கு அப்பால் சில விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. பல முயற்சிகள் செய்தும், அதில் சில குறைகள் இருந்திருக்கலாம். இதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். குருநானக்கின் பிறந்தநாளான இன்று, யார் மீதும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு விவசாயிகளும் எங்களுக்கு முக்கியமானவர்கள். எனவே, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். நாடாளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். இன்றைய புனிதமான நாளில் அவர்கள் வீடு திரும்ப வேண்டும். தங்கள் குடும்பத்தினருடன் சேர வேண்டும். புதிய தொடக்கத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது, தங்களின் ஓராண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே சமயம், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.

3 சட்டங்கள் என்ன?

* அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்: மூன்று வேளாண் சட்டங்களில் முதலாவதாக அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.

* விலை உத்தரவாத சட்டம்: ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதியும், அதற்கான வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இதன்படி, விவசாயி ஒரு பொருளை விளைவிக்கும்போதே, அதை விற்பதற்காக பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த சட்டம் கார்ப்பரேட்  கம்பெனிகளிடம் விவசாயிகளை அடகு வைப்பதற்கு சமம் என்கின்றனர் விவசாயிகள்.

* பண்ணைச் சேவை சட்டம் மற்றும் வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம்: ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிகளின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுதல். அதாவது மண்டி முறையை ஒழித்துக் கட்டுவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைதான் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குழு

வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடி, வேளாண் துறைக்கான மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஜீரோ பட்ஜெட் அடிப்படையில் வேளாண்மையை மேம்படுத்தவும், நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப சாகுபடி முறையில் மாற்றம் செய்யவும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிக பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மை உள்ளதாகவும் மாற்றவும் குழு ஒன்று அமைப்பது பற்றி அவர் அறிவித்தார். இந்தக் குழுவில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories:

More