அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை தீப விழா.!

திருத்தணி: அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் விழா சிறப்பாக நடைபெற்றது. கொரானா தொற்று காரணமாக அதிக அளவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த கார்த்திகை தீபத்தை காண்பதற்கு பக்தர்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை அன்று இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம் வயர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி தெய்வயானை சமேதராய் உற்சவர் முருகக்கடவுள் தேர் வீதியில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த சொக்கப் பனை மரத்தில் சிவாச்சாரியார் நெய் அகல் தீபம் ஏற்றும் போது எதிரே உள்ள பச்சரிசி மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகளும் வண்ணமயமாக வெடித்தன.

மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தேர் வீதியில் குவிந்து கற்பூரம் கொளுத்தி தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனர். இதற்காக கோவில் சார்பாக ராட்சத அகல்விளக்கு மற்றும் நெய் திரிகள் கொண்டுசெல்லப்பட்டு முன்னதாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த தீபம்  மலையில் எரிந்துகொண்டிருக்கும். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: