காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 720 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

காஞ்சிபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து காஞ்சிபுரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  இதுபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 269 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதில், 70 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாகவும், 40 ஏரிகள் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும், 2 ஏரிகள் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும் நிரம்பியுள்ளன. இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 451 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. இதில், 72 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாக நிரம்பியுள்ளன. 3 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக நிரம்பியுள்ளன.  மாகரல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் வாயலூர், ஈசூர், வள்ளிபுரம் தடுப்பணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. 2015க்கு பிறகு காஞ்சிபுரத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து வருகிறது.

Related Stories: