×

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்துக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.ஈரோடு, சேலம், வேலூர், தருமபுரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வடகிழக்குப் பருமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பதிவாகியுள்ளது. திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் ஆகிய பகுதியில் தலா 22 செ.மீ., மணம்பூண்டி பகுதியில் 21 செ.மீ., புதுச்சேரியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்து 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு புவியரசுன் தெரிவித்தார்.

Tags : Nilgiris ,Erode ,Krishnagiri ,Salem , வானிலை ஆய்வு மையம்
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...