வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் புகுந்த வெள்ளம்-சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்த மழைநீர்

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் புகுந்து வெள்ளநீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விட்டுள்ளது. 2 நாட்களுக்கு பலத்த மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மீண்டும் விடிய விடிய மிதமான மழை பெய்தது. இதையடுத்து நேற்று காலை 9 மணியளவு முதல் பகல் முழுவதும் இரவு வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்பாடி வி.ஜீ.ராவ் நகர், காந்திநகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் குடியிருப்புகளை சுற்றி அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சாலைகளிலும் வெள்ளம் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் வெளியே சென்று வர முடியாத நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வேலூர்-ஆற்காடு சாலை சிக்னல் பகுதியில் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கியது. இதில் வாகனங்கள் நீந்தி சென்றது. மெயின் பஜார், சுண்ணாம்புகார தெரு, தோட்டப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.

மேலும் பொதுமக்களின் அன்றாட பணிகளும் பாதிக்கப்பட்டது. வேலைக்கு சென்ற பொதுமக்கள் மழையால் சிரமத்திற்கு ஆளாகினர்.  கோட்டை கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.  தாழ்வான பகுதியாக கன்சால்பேட்டை பகுதி, சம்பத் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கிருந்தவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுப்பு அளவு தண்ணீரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

பாதாளசாக்கடை பணியால் கடும் அவதி

வேலூர் மாநகராட்சி பகுதி முழுவதும் பாதாளச்சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. இதற்காக பெரிய பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும் பள்ளம் மேடு தெரியாமல் இருப்பதால் நடந்தும், வாகனங்களிலும் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீரும், மழைநீரும் தெருக்களில் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை உருவாகி உள்ளது. மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

காட்பாடியில் அதிகபட்சம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக காட்பாடியில் 20.4 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழைநிலவரம்: குடியாத்தம்-6 மி.மீ, மேல் ஆலத்தூரில்-3.8, பொன்னை-19.4, வேலூர்-11.3, வேலூர் சர்க்கரை ஆலை-11 மி.மீ என மொத்தம் 71.9 மி.மீ என சராசரியாக 11.98 ஆகும்.

ஏரிக்கரை உடைப்பு

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் இந்திரா நகர் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கரை உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் டிராக்டர்கள் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு வந்து உடைப்பை சீர்செய்தனர். அந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு

கட்டிடங்களை அகற்றினர். தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம் வருவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: