பெருமாள் கோயில்களில் திருக்கார்த்திகை உற்சவம் நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்-திரளானோர் தரிசனம்

நெல்லை : திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டவுன் நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் நேற்று ஏற்றப்பட்டது. இதே போல் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகானச தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று பெருமாளை வழிப்பட்டனர்.

 நெல்லையில் பிரசித்திபெற்ற டவுன் நெல்லையப்பர் கோயிலில் திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் முன்னிலையில் சொக்கப்பனை ஏற்றப்படுவது வழக்கம். தீப ஒளி ஏற்றப்படும் திருக்கார்த்திகை திருநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று இரவு நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதி முன்பாக அணையா விளக்கான பரணி தீபம் ஏற்றப்பட்டது. அணையான தீபமான பரணி தீபம் தொடர்ந்து எரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி நடந்த சிறப்பு  அபிஷேக அலங்கார தீபாராதனையில் திரளானோர் பங்கேற்றனர்.

 நெல்லையப்பர் கோயிலில் திருகார்த்திகையை முன்னிட்டு இன்று(19ம் தேதி) இரவில் சொக்கப்பனை முக்கில் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இதற்கான பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து செல்லப்படும். திருக்கார்த்திகைய முன்னிட்டு சுவாமி இன்று இரவு ரிஷப வாகனத்தில் சொக்கப்பனை முக்கு பகுதிக்கு எழுந்தருள்கிறார். மேலும் நெல்லையில் உள்ள சிவன் கோயில்கள், முருகன் கோயில்கள், அம்பாள் கோயில்களிலும் சொக்கப்பனை தீபம் இன்று ஏற்றப்பட உள்ளது.

 இதனிடையே நெல்லை மாநகரில் உள்ள பெருமாள் கோயில்களிலும் திருக்கார்த்திகை உற்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. இதையொட்டி பாளை ராஜகோபாலசுவாமி கோயிலில் நேற்று இரவு 7 மணிக்கு ராஜகோபால சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் வைகானச தீபம் எனப்படும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். கோயிலுக்கு 5008 தீபம் ஏற்றப்பட்டதால், கோயில் வளாகமே விளக்குகளால் ஜொலித்தது. இதே போல் தச்சநல்லூர் வரம்தரும் பெருமாள் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றம் சார்பில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது.

இதையொட்டி தேவி, பூதேவி தாயார் மற்றும் வரந்தரும் பெருமாள் சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் நேற்று இரவு 8 மணிக்கு வைகானச தீபம் எனப்படும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் தச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தரிசித்தனர். இதே போல் நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகானச தீபம் நேற்று ஏற்றப்பட்டது.  அத்துடன் கோயில் வளாகத்திலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.

முன்னதாக நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனிடையே தச்சநல்லூர் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றம் சார்பில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று இரவு 7 மணிக்கு மேல் ஆலயம் முன்பாக தேரடி திடல் அருகே மஹா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை தீபம்  ஏற்றப்படுகிறது. முன்னதாக, சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை  சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றத்தினர் செய்துள்ளனர்.

Related Stories: