செய்யாறு அருகே பரபரப்பு ஏரிக்கரை உடைந்த அச்சத்தில் கிராம மக்கள் திடீர் போராட்டம்-உபரிநீர் பாதுகாப்பாக வெளியேற பொதுப்பணித்துறை நடவடிக்கை

செய்யாறு :  செய்யாறு அருகே ஏரிக்கரை திடீரென உடைந்ததால் அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏரி உபரிநீர் ஊருக்குள் புகாமல் பாதுகாப்பாக வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, பிரம்மதேசம் கிராமத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் ஏரி உள்ளது. சுமார் 39 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டி தொடர்ந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதலே கிராமத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

தொடர்ந்து, ஏரிக்கரையின் மேல் பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டு, சுமார் 20 அடி தூரத்திற்கு மண் சரிய தொடங்கியது. இதனால் ஏரிக்கரை உடைந்து நீரானது ஊருக்குள் புகுந்து விடுமோ என்று கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.இதுகுறித்து உடனடியாக பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறையினர், ஏரிக்கரை உடைப்பு ஏற்படாமல் இருக்கவும், கரை உடைந்தால் ஏரி நீரானது கிராமத்திற்குள் புகாமல் தடுக்கவும், ஏரியில் உள்ள நீரின் அளவை குறைக்க திட்டமிட்டனர்.

இதையடுத்து, ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கும் கலங்கல் மட்டத்தை சுமார் 5 அடி நீளம் 2 அடி ஆழத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து, ஏரியில் உள்ள நீரை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். சுமார் 213 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்ட பிரம்மதேசம் ஏரியில் தற்போது 39 மில்லியன் கனஅடி நீர் தேங்கியுள்ளது. மேலும், நாட்டேரி கிராம ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், தற்போது பெய்து வரும் கனமழையின் வெள்ளம் சேர்ந்து, இந்த  ஏரிக்குள் வந்து அப்படியே உபரிநீராக வெளியேறி சென்று கொண்டிருக்கிறது.

மேலும், கலங்களை உடைத்ததையடுத்து ஏரியில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏரி உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஓரமுள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ₹75 லட்சம் மதிப்பில் ஏரி குடிமராமத்து பணிகள் திட்டத்தில் தூர்வாருதல், மதகு புதுப்பித்தல், கரை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், நேற்று ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை வெம்பாக்கம் தாலுகாவில் பெய்துள்ள மழையின் அளவு 9 சென்டி மீட்டராக பதிவாகி உள்ளது. மேலும், இரவு 20 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதாலும், மழைநீர் ஏரி உபரிநீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுமோ என்று மக்கள் அச்சமடைந்தனர். இதனால் கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை பொறியாளர் கோவிந்தராஜ், செய்யாறு டிஎஸ்பி செந்தில் மற்றும் பிரம்மதேசம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, உபரிநீர் வெளியேறும் இடத்தை ஒட்டியுள்ள சுமார் 800 மீட்டர் தூரம் கொண்ட சானா பாட்டன் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஏரியின் உபரிநீர் அந்த கால்வாய் மூலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, ஜேசிபி மூலம் கால்வாயை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் பதற்றம் நிலவியது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரம்மதேசம் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயானது 300 கனஅடி நீர் செல்லும் கால்வாய். தற்போது கால்வாய் வழியாக 150 கனஅடி நீர் செல்கிறது. மழை வெள்ளம்  அதிகரித்தாலும் உபரிநீர் ஊருக்குள் புகுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே அச்சப்பட தேவையில்லை’ என்றனர்.

Related Stories:

More