×

நாமக்கல் மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை கடந்த ஓராண்டில் நடந்த 20 குழந்தை திருமணங்கள்- 24 மணி நேர வேட்டையில் 20 பேர் போக்சோவில் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில், 20 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் 24 மணி நேர வேட்டையில் 20 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சைல்டுலைன் அமைப்பினர் குழந்தை திருமணம் தடை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர், கடந்த 6 மாதமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் 20 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமிகளை திருமணம்  செய்த 20 நபர்கள் குறித்து கணக்கெடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, அவர்களை கைது செய்யும்படி, மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் டாகூர், போலீசாருக்கு உத்தரவிட்டார்.எஸ்பியின் உத்தரவை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள். இதில் 18 வயதுக்கு குறைவான 20 சிறுமிகளை திருமணம் செய்த 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 24 மணி நேர வேட்டையில் மேற்கண்ட 20 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  

இவர்களில் நாமக்கல் பகுதியை சேர்ந்த 3 பேர், எருமப்பட்டியில் 2 பேர், மோகனூரில் ஒருவர், புதுச்சத்திரத்தை சேர்ந்த 3 பேர், மல்லசமுத்திரத்தில் ஒருவர், பள்ளிபாளையத்தில் ஒருவர், வெப்படையில் ஒருவர், பரமத்தியில் 4 பேர், ஜேடர்பாளையத்தில் 2 பேர், நல்லூர், வேலகவுண்டம் பட்டியில் தலா ஒருவர் என 20 பேர் அடங்குவார்கள். 13, 14, 15, 16 வயது சிறுமிகளை இவர்கள் திருமணம் செய்துள்ளனர். பலர் குழந்தையும் பெற்றுள்ளனர். ஒரு சிலர் தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 20 பேர் மீதும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 17 வயதிற்கு உட்பட்ட 9 குழந்தைகளுக்கும், 16 வயதிற்குட்பட்ட 6 குழந்தைகளுக்கும், 15 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகளுக்கும், 14 வயதிற்குட்பட்ட 1 குழந்தைக்கும், 13 வயதிற்குட்பட்ட 1 குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சரோஜ்குமார் டாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குழந்தை திருமணம் சம்பந்தமான புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் 1098, நாமக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100, 94981 81216 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கவேண்டும். மீறி குழந்தை திருமணம் செய்பவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலீசார் அதிர்ச்சி

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 20 பேரில் 10 பேர் காதல் திருமணம் செய்துள்ளனர். மற்றவர்களுக்கு பெற்றோர் துணையுடன் திருமணம் நடந்துள்ளது. குழந்தை திருமணம் செய்து கொணடவர்களில் 2 பேர் குழந்தை பெற்றுள்ளனர். ஒரு சிலர் கர்ப்பமாக இருக்கிறார்கள். குழந்தை திருமணம் செய்த 20 பேரும், கூலிவேலைக்கு செல்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஆவர். ஒரு சில திருமணங்கள் சொந்தம் விட்டு போகக்கூடாது என்பதற்காக பெற்றோர்களை முன்வந்து தங்களது குழந்தைகளை குறைந்த வயதில் உறவினர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வழக்கமாக கொல்லிமலையில்தான் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறும். தற்போது தரைப்பகுதியில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குழந்தை திருமணம் செய்து கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட எஸ்பி சரோஜ்குமார் டாகூர் மறுத்துவிட்டார்.

Tags : Namakkal district ,Bokso , Namakkal: In Namakkal district in the last one year, 20 child marriages have been found to have taken place. District in this connection
× RELATED கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்